பக்கம்:மறைமலையம் 3.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
25

சுற்றத்தாரிடம் இருந்தது. ஒருநாள் அப் பிள்ளை கட்டிலிற் படுத்து உறங்குகையில், தூரதேசத்தில் நோயாய்க் கிடந்த அப்பிள்ளையின் தாய் இங்கே அப் பிள்ளை உறங்கிக் கொண்டிருக்கும் கட்டிலின் பக்கத்தே குனிந்து நின்று அதனை உற்றுநோக்குவதை அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஏவற்காரி ஒருத்தி பார்த்து உடனே வீட்டிலுள்ளாரிடம் போய் அறிவித்தாள்; அவர்கள் எல்லாம் அதிசயப்பட்டு வந்து பார்க்கையில் ஒன்றையுங் காணவில்லை; ஆனால் சில நாழிகைக்குள் எல்லாம் தூரதேசத்திற் பிணியாய்க் கிடந்த அப்பிள்ளையின் தாய் இறந்துபோனாள் என்று தந்தி சமாசாரம் வந்தது.

இன்னும் இப்படியே நடக்கும் சம்பவங்கள் கணக்கில்லாமல் இருக்கின்றன. கிறிஸ்துவர்கள், மகம்மதியர்கள் கல்லறைகளில் நடுநிசியிற் சிலர் போக நேரிட்ட போது அக்கல்லறைகளின் பல திறப்பட்ட வடிவங்கள் உலாவுதலையும், உட்கார்ந்திருத்தலையும் கண்டு அதிசயப்பட்டுத் திரும்பிவந்து சொல்லிய செய்திகளும் பல உண்டு. இங்கே ஒன்று கவனித்தல் வேண்டும். ஒருவர் இறந்தபின் அவர் உடம்பைப் புதைத்து வைப்பதைக் காட்டிலும், தீயிலிட்டு எரித்துவிடுவதே நல்லதென்று நல்லறிவுடையோர் பலரும் கருதுகின்றார்கள். ஏனென்றால், இத் தூலசரீரத்திற்கும் அதற்கு அடுத்த சூக்குமசரீரத்திற்கும் மிகவும் நெருங்கின உறவு இருப்பதால், இத் தூலசரீரம் அழியாதிருக்குந்தனையும் அதனோடு நெருங்கிய சம்பந்தமுள்ள சூக்குமசரீரம் அதன் பக்கத்தே வந்து உலவிக் கொண்டிருக்கும். மனிதர்க்கு இத் தூலசரீரத்தில் அவ்வளவு அபிமானமிருப்பதால் இத் தூல சரீரம் உள்ள அளவும் அவர்கள் கொண்ட அபிமானத்தைத் தோற்றுவிப்பதாகிய சூக்குமசரீரம் அதன் பக்கத்திற் சஞ்சரித்துக்கொண்டே நெடுங்காலம் இருப்பதும் உண்டு. தூலசரீரத்தைத் தீயிலிட்டுக் கொளுத்திட்டால், சூக்குமசரீரம் இங்கு வந்து உலவுதலைவிட்டு நீங்கிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/58&oldid=1628297" இலிருந்து மீள்விக்கப்பட்டது