பக்கம்:மறைமலையம் 3.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
33

நலம் பெறுவார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். இவ்வாறு சில வருடங்கள் கழிந்தன. பிறகு, யூலியா என்னும் மாது மரணமடைந்தாள். நற்குண நற்செய்கையுடைய அம் மாதரின் மரணமானது அவள் நண்பர்கட்கெல்லாம் மிக்க துயரத்தை விளைத்ததென்றாலும், அவள் ஆருயிர்ச் சினேகிதியான எல்லன் என்பவளுக்கு விளைத்த துக்கம் இவ்வளவென்று வரையறுத்துச் சொல்வது யார்க்கும் முடியாது. தன் வாழ்க்கையின் அற்புத ஒளி மரண இருளிலே மறைந்து போயிற்றென்றும், அவளையின்றி இனித் தான் உயிர்வாழ முடியாதென்றும் எல்லன் என்பவள் நினைந்து நினைந்து உருகினாள். ஆனால், ஓர் இரவு அவர்கள் முன் செய்து கொண்ட சொல்லுறுதி நிறைவேறியது. எல்லன் என்பவள் தன் பழைய வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கையில் திடீரெனப் படுக்கையினின்றும் எழுப்பப்பட்டாள். அஃது இரவுகாலமாயிருந்தும், அவளிருந்த அறை மாத்திரம் பேரொளியால் நிரம்பி விளங்கிற்று. உடனே அவளது படுக்கையின் பக்கத்தில் யூலியா தான் உயிரோடிருந்த காலத்தில் எப்படியிருந்தாளோ அப்படியேயான உருவத்தோடு மகிழ்ச்சியுஞ் சாந்தமுந் தன் முகத்தில் இனிது விளங்க நின்று கொண்டிருந்தாள். இப்படிச் சில நிமிடங்கள் சிரித்த முகத்தோடு வாய் பேசாமல் நின்றனள். எல்லன் என்பவளோ தன் சினேகிதியின் வடிவத்தைக் கண்டவுடனே திகிலடைந்தவளாய்ப் பேசாதிருந்தாள். அதன்பிறகு அவ்வடிவமானது மெதுவாய்க் கரைந்து மறைந்து போயிற்று.

இவ்வாறு சில மாதங்கள் சென்றன. அதன்பின் எல்லன் என்பவள் இலண்டன் மாநகரத்திற்கு வந்தாள். வந்த நாளின் இரவிலே திரும்பவும் யூலியாவின் வடிவம் எல்லன் என்பவட்கு எதிரே தோன்றியது.

இப்போது இலண்டன் மாநகரத்தினின்றும் பிரசுரிக்கப்பட்டு உலகம் எங்கும் பரவும் பிரசித்த ஆங்கிலப் பத்திரிகையான குறிப்புகளின் குறிப்பு* (The Review of Reviews) என்பதன் தலைவரும், மகாவித்துவானும், பெரும் பிரபுவுமான ஸ்டெட் என்னும் துரை, எல்லன் என்பவள் தங்கியிருந்த வீட்டிலே போய்த் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு எல்லன் என்னும் மாது தன் சினேகிதி யூலியாவின் வடிவம் முதல் ஒருமுறை வந்த விவரத்தைத் தெரிவித்துப் பின்னும் “யான் நேற்றிரவு இவ்வறையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/66&oldid=1628559" இலிருந்து மீள்விக்கப்பட்டது