பக்கம்:மறைமலையம் 3.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34

❖ மறைமலையம் - 3 ❖

அவளைத் திரும்பவும் பார்த்தேன், இரண்டு முறையிலும் அவளை ஒருபடியாகவே கண்டேன். யான் தூங்கிக் கொண்டிருக்கையில் திடீரென எழுப்பப்பட்டேன். எழுந்தவுடனே அவள் என் படுக்கையின் பக்கத்தில் நிற்கக் கண்டேன். முதன்முதல் அவள் எனக்குத் தோன்றிய போது, அவள் இறந்து நெடுநாளாகாமையால் அது துயர மிகுதியாற் றோன்றிய என் மனத் தோற்றமாக இருக்கலாமென்று நினைத்தேன்; ஆனால், நேற்றிரவில் தோன்றிய அவள் வடிவழகைப்பற்றி அப்படி நினைக்கக் கூடவில்லை. அவளை யான் தெளிவுபெறக் கண்டு, அவள் முன் சொல்லிய சொல்லை நிறைவேற்றுவதற்கு வந்த யூலியாவே யென்று அறிந்தேன். ஆயினும் யான் அவள் பேசக் கேட்கவில்லை. அவள் ஏதோ எனக்குச் செய்தி கொண்டு வந்தாளென நினைந்தேனாயினும், அவள் சொல்ல விரும்பியது இன்னதென்று யான் கேட்கக் கூடவில்லையே!” என்று அவரிடம் வருந்திக் கூறினாள்.

அதனைக் கேட்டிருந்த ஸ்டெட் என்னுந் துரைமகனார் தமக்கு யோகசக்தி யொன்று வாய்க்கப் பெற்றிருந்தமையால், அச் சக்தியின் உதவியால் யூலியாவிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை அறிந்து கொள்வோமென்று சொல்லினர். அவரிடமிருந்த அவ்வியோகசக்தி யாதென்று கேட்பீர்களானால், அதனைப் பற்றிச் சிறிது இங்கே சொல்லுகின்றோம். ‘தானே எழுதுதல்’ என்பதுதான் அவரிடமிருந்த யோகசக்தியாகும். அஃதாவது: அவர் தமது கையில் ஓர் இறகு ஏந்திக் கொண்டு மேசையின்மேலே கடிதம் வைத்து அக் கடிதத்தின்மேல் இறகை வைப்பாரானால், அவரது கை தானாகவே எழுதிக் கொண்டு போகும். அப்படி எழுதும் போது அவர் தம்முடைய முயற்சி சிறிதும் இன்றி அக்கை எழுதிக்கொண்டு போகும் வழியே விட்டிருப்பார். அவரது கை அங்ஙனம் தானாகவே எழுதி முடித்த விஷயங்களைப் பார்த்தால் அவை முன்னாளில் நடந்த செய்திகளையும், இனி நடக்கப்போகுஞ் செய்திகளையும் தெளிவாகச் சொல்லியிருக்கும். இவ்வளவு அற்புதமான சக்தி இந்தத் துரைமகனாரிடமிருந்தமையால், இவர் தமது கையைச் சூக்குமஉடம்பில் நிற்கும் யூலியா பிடித்தெழுதக் கொடுப்பதாகச் சொல்லி, அதற்கு வேண்டும் ஏற்பாட்டோடு அமர்ந்திருந்தார். இறந்து போகியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/67&oldid=1628560" இலிருந்து மீள்விக்கப்பட்டது