பக்கம்:மறைமலையம் 3.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
55

இப்போது மறுபடியும் திருப்பிச் சொல்லுகின்றேன். மக்களுள்ளத்தைப் பற்றியிருக்கும் பல விஷயங்களுள் மெய்யாகவே இதுதான் முதன்மையானது; தெளிவாகவும், சாஸ்திர நுணுக்கத்திற்கு இசைந்ததாகவும், மத சம்பந்தமுடையதாகவும் வைத்து இதனை ஆழச் சிந்திப்பதுதான் மன்பதை முழுவதுக்கும் மிகுந்ததொரு பற்றினை விளைவித்துப் பெரும் பயனைத் தருவதாகும். எனக்குச் சமயம் வாய்த்தவுடனே என்னுடைய கருத்துக்களை வெளியிடுவதற்கு முயல்வேன். இம் மந்திரக் கூட்டத்தைத் தம் பொறுப்பில் வைத்திருப்பவரும், இனிய சொல்லும் வசீகரமும் உடையவருமான யூலியா என்னும் மாதரார் எப்போது யான் தன் கையை உபயோகப்படுத்திக் கொள்ளலாமென்பதனை அறிவிப்பதாக வாக்களித்திருக்கிறார். காலை வந்தனம்.”

ஸ்டெட்  : காலை வந்தனம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.”

சூக்கும சரீரியான யூலியா சொல்லுகிறாள் : “கிளாட்ஸ்டன் துரையவர்கள் இங்கே நெடுநேரம் தொடர்புற்று நிற்பது அவருக்கு மிகவுந் துன்பமாயிருக்கிறது.

ஸ்டெட் : “முழுவதும் பெறும்வரையில் திங்கட்கிழமைப் பத்திரிகையில் இவை தம்முள் ஒன்றும் வெளியிடாதிருப்பது நன்றென்று நினைக்கிறீர்களா?”

யூலியா : எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து வெளியிடுவதுதான் நல்லதாகும்.

ஸ்டெட் : “இடம் வேண்டுமே என்பதுதான் ஆலோசனையாக இருக்கிறது. இப்போதுள்ள வரையில் நடந்த உரையாடலைப் பிரசுரிப்பதென்றால் அது மூன்று பத்திகளைக் கவர்ந்துகொள்ளும்; அவர் இன்னும் எழுதப்போவதைச் சேர்த்தால் எல்லாம் ஆறு பத்திகளைக் கவர்ந்துகொள்ளுமே!”

யூலியா : “அதைப் பற்றி உங்கள் விருப்பப்படி செய்யலாம். இச் செய்திகளைப் பற்றி நீங்கள் என்னிலும் நன்றாய் அறிவீர்கள். இன்று காலையில் உங்களுடன் வந்திருந்த கனவானும் நீங்களும் அதைப் பற்றி ஏற்பாடு செய்யுங்கள். கார்டினல் இதோ வந்திருக்கிறார்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/88&oldid=1628605" இலிருந்து மீள்விக்கப்பட்டது