பக்கம்:மறைமலையம் 3.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
61

அறிவித்தார். தந்தையார் அதற்கு இசைந்து தம் புதல்வர் பிறப்பதற்குமுன், தமக்கும் தம் நண்பரான அப்பண்டிதருக்குந் தெரிய நடந்த சில முதன்மையான செய்திகளைச் சொல்லி அனுப்பினார். அச் செய்திகளைக் கேட்டவுடன் அவர் தாம் மறுமையுலகத்தில் வந்திருப்பதாக உண்மை உணர்ந்து அவ்வுலக இயல்புகளை அங்கிருந்தவாறே ஆராய்ந்து அறியத் தலைப்பட்டார். உண்மையாக நடந்த இந் நிகழ்ச்சியினால், இந் நிலவுலகில் உயிரோடிருக்கும் நாட்களில் நாத்திகம் பேசித் திரிவது மக்களாய்ப் பிறந்தவர்களுக்கு மிகுந்த பொல்லாங்கினை விளைக்குமென்பது தெற்றெனப் புலப்படுகின்றதன்றோ? இப்படியாகவும், இந்த மண்ணுலகத்தில் இருப்போரிற் பெரும்பாலார் ஆன்ம விசாரணை தெய்வ விசாரணை செய்யாமல் பொழுது விடிந்து எழுந்தது முதல் பொழுதுபோய்த் தூங்கப்போகும் அளவும் பணமோ பணம் என்று பேயாய் அலைந்து திரிகிறார்கள். ஆகையினாலும், தூங்கும்போதும் இவர்கள் கனவு காண்பதெல்லாம் பணத்தைப் பற்றினவே யாகையினாலும் மண்ணோடு சேர்ந்த மண்ணைச் சம்பாதிப்பதற்கு இவர்கள் தமது அரிய அறிவைச் செலவிட்டு அவ்வறிவை மண் வடிவாகச் செய்துவிடுகின்றார்களாகையினாலும் இவர்கள் இறந்துபோன பின்னும் பணமோ பணம் என்று சூக்கும சரீரத்திற் பேயாய் அலைந்து திரிவார்கள்; பணத்திலேயே சிந்தை அழுந்தி நிற்கும் அவர்களை இங்குள்ளவர்கள் வருந்தியழைத்தாலும் அவர்களை அதனைத் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியில்லாமல், அறிவு இருண்டு கிடப்பார்கள். ஆதலினாலேதான், நம்மனோரிற் பெரும்பாலார்க்குச் சூக்குமசரீர வாசிகளான அவர்கள் எதிர் வந்து தோன்றுதற்கு இடம் இல்லாமற் போகின்றது. அது மாத்திரமோ! உயிரோடு இருப்பவர்களிற் பெரும்பாலாரும் பணம் பணம் என்றே நாள் முழுதுங் கழித்தலால் ஏகாந்தமான ஓரிடத்திற் பரிசுத்த சிந்தனையோடும் இருந்து மனத்தை ஒரு வழிப்படுத்தக் கூடாமலிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவர்கள் சூக்குமசரீரவாசிகளைக் காணவேண்டுமென்று ஆசைப்பட்டால், அது ‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது’ போற் கைகூடாமற் போவது திண்ணமன்றோ!

மேலும், இவ்வுலகில் உயிரோடிருந்த நாட்களில் பரோபகார சிந்தை மேற்கொண்டு, ஏதோ கடமைக்காக இலௌகிக் காரியங்களைச் செய்து உழல்பவர்கள் இவ்வுலக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/94&oldid=1628616" இலிருந்து மீள்விக்கப்பட்டது