பக்கம்:மறைமலையம் 3.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
63

அப்படிப்பட்டவர்களைத் தாம் இங்குள்ளவர்கள் பேய் என்று சொல்லுகிறார்கள். மாரண மந்திரங்களிற் பழகி அம் மந்திர சகாயத்தால் அக்கொடிய பேய்களை அழைக்கும் தீய மந்திரவாதிகள் சிலர் அவற்றை இங்கு அழைத்து அவற்றின் உதவியால் சிலர்க்குத் தீங்கு செய்து வருகிறார்கள் என்பது உண்மையே. தீயோர் தமக்குள் உண்டாகும் உறவானது சில நாளில் அவர்கள் எல்லார்க்குமே பெருந்தீங்கினை விளைவித்து அவர்களைப் பெருந்துன்பத்தில் ஆழ்த்துவதுபோலத், தீய பேய்களை வரவழைக்கும் மந்திரவாதிகள் சில நாளில் அவற்றால் தாமும் அழிந்து, தம்மால் அவைகளும் பெருந்துன்பத்தை அடையச் செய்வார்கள். ஆகவே, தீயோர்களான சூக்கும சரீரவாசிகள் பொல்லாத மந்திரவாதிகள் சிலரின் சொல்லுக்கு இணங்கிப் பொல்லாங்கு செய்ய முன்வருவது போல, மிக நல்லவர்களான சூக்குமசரீர வாசிகள் பிறர்க்குத் தீங்கு செய்வதற்குச் சிறிதும் உடன்படமாட்டார்கள்.

அவ்வாறாயின், தீய பேய்கள் மாத்திரம் மந்திரவாதிகளுக்கு வசப்பட்டுப் பிறர்க்குத் தீங்கு செய்யும்படியான வலிவை எவ்வாறு அடைகின்றனவென்றால், இங்கே தீயவர்களாயிருந்து இறந்து போனவர்கள் சூக்குமசரீரத்திற்குச் சென்றவுடனே ஏதும் தோன்றப்பெறாத இருள் உலகத்தில் அலைந்துகொண்டிருப்பர்; யார்க்கு எது பழக்கமோ அவர்க்கு அதுவே எப்போதும் நினைவிலிருப்பது இயற்கையாதலால், இங்கிருந்த நாட்களில் தீயநினைவு தீயசெய்கைகளிலே பழகினவர்களுக்கு இறந்த பின்னும் சூக்கும சரீரத்தில் அத்தீய நினைவுந் தீய செய்கையுமே இடைவிடாது தோன்றிக் கொண்டிருக்கும்; அப்படிப்பட்டவர்களுக்கு இவ்வுலகத்தில் உள்ள பற்றுச் சிறிதும் நீங்காமையினால் இறந்த பிறகும் அவர்கள் சூக்குமசரீரத்தோடு இவ்வுலகத்திலுள்ள தீயோர் கூட்டங்களிலும், அசுத்தமான இடங்களிலும் வந்து திரிந்து கொண்டிருப்பர். உயிரோடிருந்த போது மாமிசத்தை வரை துறையில்லாமற் புசித்துக் கள்ளைக் குடித்து வறி கொண்டு தம்மோடொத்தவர்களுடன் சண்டையிட்டுத் திரிந்தவர்கள் இறந்தபிறகும் அவ்வாசை தம்மை விட்டு அகலாமையினால், இறைச்சி விற்கும் இடங்களிலும் கள்ளுக்கடைகளிலும் மது மயக்கத்தாற் சண்டையிடுவோர் கூட்டங்களிலும் வந்து திரிகுவர். இவ்வாறு இவர்கள் தாமாகவே வந்து திரிவதற்கு ஆசையுள்ளவர்களாயிருத்தலினால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/96&oldid=1628622" இலிருந்து மீள்விக்கப்பட்டது