பக்கம்:மறைமலையம் 30.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

பெறவேண்டுமெனப்

155

என்று அவரருளிச்செய்த திருக்குறளால் ஆசிரியர் கருத்து இன்னதென்பது நன்கு புலனாகா நிற்கும். தன் வழி நில்லாது, தாம் செல்லும் வழியே தன்னை ஈர்த்துச் சென்று பழிபாவங் களுட் படுப்பிக்கும் ஐம்புல அவாக்களே ஒருவனுக்குத் தீதுபயந்து அவன்றன் பிறவிகளைப் பெருக்குவதாகும். துள்ளியோடும் புள்ளிமான் ஒன்றைக் கண்டு அதன் அழகை வியந்து இன்புறுவது குற்றமாகாது; அதனழகை வியந்தின்புற்ற அவ்வளவில் அமையாது அதனைக் கொன்று அதன் தசையை வதக்கித் தின்னவேண்டுமென்றெழும் அவாவே தீதுடைத்தாம். இங்ஙனம் ஒரு வறியவன் தனக்கு ஒரு நாட் கிடைத்த நல்லுணவைச் சுவைத்துண்டு இன்புற்றிருத்தல் குற்றமாகாது; அந் நல்லுணவைப்போலவே எந்நாளும் இன்சுவை யுணவு பேரவாக்கொண்டு, அதற்கேற்ற நன்முயற்சியுமின்றித், திருட்டுத் தொழிலால் அதனைப் பெற முயல்வதே தீதுடைத்தாம். இங்ஙனமே, தன் நிலையினையும் பிறர் நிலையினையும் மறந்து, எல்லா இன்பத்திற்கும் மேலான பேரின்பத்தைத் தரவல்லவனான இறைவனையும் மறந்து, தன் உள்ளத்தான் வேட்கப்பட்ட பொருள் நுகர்ச்சியிலேயே ஒருவற்குக் கருத்து ஈடுபட்டு நிற்குமாயின், அஃது அவற்கும் பிறர்க்குந் தீது பயப்பதாகவே முடியும். அவ்வாறின்றித் தான் நுகரும் பொருள் நுகர்ச்சி யெல்லாந் தன்னையும் பிறரையும் இன்பத்தில் வளரச்செய்து, இறைவன் திருவடிப் பேரின்பத்தில் உய்க்கும் வழியேயாம் என்னும் உணர்ச்சிவலியுடையானுக்கு, ஐம்புல நுகர்ச்சி நன்மை பயப்பதேயன்றித் தீமை பயவாது. ஐம்புல நுகர்ச்சிகளும் அவை தமக்குரிய பொருள்களுந் தீமையே தருவனவாயின் அவற்றை இறைவன் நமக்குப் படைத்துக் காடானன்றோ? உழவுதொழில் செய்யும் ஒருவன் தன் மகனுக்கு ஒர் அரிவாளைக் கொடுப்பது, அதனை அவன் நெற்றாள் அரிதற்குப் பயன்படுத்துவானென்னுங் கருத்துப் பற்றியேயன்றி, அதுகொண்டு அவன் மக்கள் பலரையுங் கடைசியிற் றன்னையும் வெட்டி வீழ்த்திவிட வேண்டுமென்னுங் கருத்துப்பற்றியன்றே. அதுபோலவே, ஐம்புல நுகர்ச்சிகளை இறைவன் நமக்குத் தந்ததும், அவற்றை நாம் நல்வழியில் துய்த்தல் வேண்டுமென்னும் கருத்துப்பற்றியே யன்றி,அவற்றைத் துய்த்தலாகாது, அல்லது அவற்றைத் தீயவழியிற் செலுத்துதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/188&oldid=1592524" இலிருந்து மீள்விக்கப்பட்டது