பக்கம்:மறைமலையம் 31.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

193

அங்ஙனங் கோத்துச் செய்த கருங்கற்றிருவுருவை மரநீழல் களிலேயே நிறுத்தித், தமது அன்பின் பெருக்கால் அதனைத் தொட்டு நீராட்டியும், அதற்கு மலர் மாலை சூட்டியுந், தாம் உண்ணும் உணவுப் பண்டங்களாகிய பழங்களுஞ் சோறும் அதற்கும் உணவாகப் படைத்தும், இறைவன் றிருவுருவினைத் தமதருகே பெற்று அதனைத் தொடவும் அதனை அண்மை யிற் காணவும் பெற்ற பெருங் களிப்பால் அதன்முன் நின்று பாடியும் ஆடியும் எல்லாம் அவர் அதனைப் பரவி வரலானார். இவ்வாறாக, அம்முது மக்கள் தீக்குழியையும் அதில் வளர்ந்தெரியுந் தீச்சுடரையும் ஒப்பதாகத் தாங் கருங்கல்லிற் சமைத்து நிறுத்திய பண்டைத் திருவுருவே பிற்காலத்திற் சிவலிங்கம் என்னும் பெயரால் வழங்கப்பட்டு வரலாயிற்றென் றுணர்தல் வேண்டும்.

ஆரியர் இவ் விந்திய நாட்டுட் புகும் முன்னமே, பண்டைத் தமிழ்மக்கள் இச் சிவலிங்கத் திருவுருவை அமைத்து அதனை வழிபட்டு வந்தனரென்பதற்கு, வடமேற்கே பஞ்சாபு மாகாணத்தில் இற்றைக்கு ஐயாயிர, ஆறாயிர ஆண்டுகளுக்கு முன்னரே நாகரிகத்திற் சிறந் தோங்கித் திகழ்ந்து பின்னர் அழிந்துபட்ட அரப்பா, மொகிஞ்சதரோ என்னும் பண்டைத் தமிழரின் நகரங்களி லிருந்து இப்போது வெள்ளைக்கார ஆசிரியர்களால் அகழ்ந்தெடுத்து வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான சிவலிங்கத் திருவுருக்களே உறுபெருஞ் சான்றாய் விளங்கா நிற்கின்றன.

1

இனி, இங்ஙனங் கல்லிற் சமைத்துத் தாம் வழி பாடாற்றி வருஞ் சிவலிங்க வடிவந், தாம் பண்டு நிலத்தின் கண்ணே அகழ்ந்த குழியில் வளர்த்து வணங்கிய தீச் சுடரின் வடிவமே யன்றிப் பிறிதன்றென்பதனை மறவாமல் நினைவு கூர்தற்பொருட்டே, தாம் ஆற்றும் அச் சிவலிங்க வழி பாட்டின் ஈற்றில் ஓர் ஒளியினைக் காட்டி அதனை முடிப் பாராயினர். அவர் அங்ஙனம் ஈற்றிற் காட்டிய ஒளியினையே, இஞ்ஞான்று விளக்குந் திரியொளியிலுங் கருப்புரக் கட்டி யொளியிலுங் காட்டி வருகின்றனரென் றுணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இவ்வாறு கல்லிற் சமைத்த சிவலிங்கவுருவின் வணக்கந் தோன்றிய காலத்திலெல்லாம் பழந்தமிழ் மாந்தர் தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/218&oldid=1592952" இலிருந்து மீள்விக்கப்பட்டது