பக்கம்:மறைமலையம் 34.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் 1. காப்புப் பருவம்

பிள்ளைத் தமிழாசிரியர் பாட்டுடைத் தலைவரைக் குழந்தையாகக் கருத்திற்கொண்டு அக்குழந்தைக்கு எவ்வித இடையூறும் நேராவண்ணம் கடவுளர் காக்க எனத் தாய்மார்கள் கூறுவதுபோல வேண்டிக் கொள்வதாகப் பாடப்படுவது காப்புப் பருவமாகும். "குழந்தை பிறந்த ஏழாம் நாளில் அதற்குக் ‘காப்பிடல்’ என்னும் பழக்கம் ஒன்று உண்டு. அதனை ஒட்டிய இலக்கிய வழக்கே இக்காப்புப்பருவம்" என்று டாக்டர் உ.வே.சா.கூறுவர். 'பிள்ளைப் பாட்டே தெள்ளிதின் கிளப்பின்

மூன்று முதலா மூவேழ் அளவும்

ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே'

எனப் பன்னிரு பாட்டியல் கூறுவதால் முதற்பருவமாகிய இக்காப்புப் பருவம் குழந்தையின் மூன்றாம் திங்களில் பாடப்பெறும் என வரையறுக்கலாம்.இப்பருவத்தே பாடுதற்குரிய உமையவள், திருமால், சிவன், பிரமன், விநாயகன், முருகன், உமையவள், திருமகள், நாமகள், எழுகன்னியர், முப்பத்துமூவர், சூரியன், இந்திரன், குபேரன் என்று பலராவர். காப்புப் பருவமாதலின் காத்தற் கடவுளாம் திருமாலை முதற்கடவுளாக அமைத்துப் பாடுவது மரபு. இப்பருவத்தே கடவுளரைப் பாடும்போது அவர்தம் கொலைத்தன்மையும், கொடுமையும் கூறாது மங்கலமாகப் பாடவேண்டும் என்று பாட்டியல் நூல்கள் இலக்கணங் கூறுகின்றன. கடவுளரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட நூல்களில் காப்பிற்குரியவர் அவராக அமைந்து விடுவதால் அவரை விடுத்து வேறு கடவுளர்களை விளித்துப் பாடுதல் மரபு அன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/136&oldid=1595025" இலிருந்து மீள்விக்கப்பட்டது