பக்கம்:மறைமலையம் 4.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மறைமலையம் – 4

துன்புற்றிருப்பார்கள். ஆகையால்,அளவுக்குமேற் பொருள் தேடித் தொகுப்பது, தொகுப்பானுக்குப் பலவகைத் துன்பங்களைத் தருவதேயன்றியும், அவன் மனைவி மக்கள் முதலாயினாரையும், நற்குண நற்செய்கைகளில் மேம்பட ஒட்டாமற் றடைசெய்து அழித்துவிடும்.

இவ்வியல்புகளைப் பொது மக்கள் சிறிதும் நினைந்து பாராராயினும் மனிதவசியத்தினை விரும்பும் மேலோர் இவற்றை நன்கு அறிந்து, தமது அறிவைப் பெரும்பாலும் பேரின்பப் பொருள் தேடும் அழகிய முயற்சியிலே புகுத்தல் வேண்டும். பேரின்பப் பொருளிலே கருத்தை வைத்து அதனையே பெறுதற்கு நாட்டங் கொண்டிருப்பவனுக்குச் சிற்றின்பப் பொருள் அவன் வேண்டுங் காலத்திலெல்லாந் தானாகவே வரும். பொருளை ஒரு பொருட்டாகக் கருதாதவனுக்குப் பொருள் தானே வந்து சேர்தலும், பொருளையே நினைவில் வைத்திருப்பவனுக்கு அஃது அவனிடம் வாராமற் போதலும் யாம் பழக்கத்தில் அறிந் திருக்கின்றேம். அஃதெப்படி யென்றாற் பொருளிலே நோக்கம் வைத்திருப்பவனோடு பழகுகின்றவர்கள், அவனுடைய மனப்போக்கைத் தெரிந்து கொண்டவுடனே, 'இவன் பணந் தொகுப்பதிலேயே நாட்டமாயிருக்கின்றானாதலால் இவன் நமது பணத்தை எங்கே ஏமாற்றிக் கைப்பற்றுவனோ' என்று அஞ்சி அவனைவிட்டு அகலுவர்; இப்படியே பலரும் அவனை விட்டு அகன்றால், அவன் பிறருடைய உதவியுந் துணையும் இன்றித் தானாகவே தான் நினைத்தபடி பொருள் ஈட்டக் கூடாமல் ாமல் வறியனாய்ப் போவன். இனிப் பொருளைப் பொருட் படுத்தாதவன் இவன் என்று பழக்கத்தினால் மற்றொருவனை அவர்கள் தெரிந்த பிறகு, 'இவன் பொருளை ஒரு பொருட்ட எண்ணாதவனாதலால், நாம் எத்தனை கோடி பொன்னை இவனிடம் வைப்பினும் இவன் நம்மை ஏமாற்றி அவற்றைக் கைப்பற்றமாட்டான்' என்று பலரும் உறுதி கொண்டு அவனைத் துணையாக்கித் தம் வருவாயை மிகுதிப் படுத்திக் கொள்வதுடன், துணைநின்ற அவனுக்கும் வேண்டிய பொருள் தந்து அவனை வளம்படுத்துவர். ஆகவே, பொருளைப் பொருள் பண்ணாதவனுக்குப் பொருள் தானே வருதல் திண்ணமாகும் என்றறிக. மனிதவசியத்தினை விரும்புகின்றவர் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/43&oldid=1575995" இலிருந்து மீள்விக்கப்பட்டது