பக்கம்:மறைமலையம் 4.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மறைமலையம் – 4

இங்ஙனமே மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார் முதலிய எல்லாரிடத்தும் விருப்பமும் அன்பும் மேற்கொண்டு அவர்கட்கு வேண்டுவன செய்து ஒழுகுதல் ஒருவனுக்குக் கடமையே யல்லாமல், அவர்களைத் தனக்கே உரியவர்களாகக் கொண்டு பற்றுவைத்து நடத்தல் சிறிதும் பொருந்தாது. உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுந் தத்தங் கடமைகளை வழுவாமற் செய்து, அறியாமையினையுந் துன்பத்தினையும் ஒழித்துப் பேரின்பத்தைப் பெறுதற்கு வந்திருக்கின்றன. இவ்வெல்லா உயிர்களையும் உலகத்தையும்

உலகத்துப் பொருள்களையும் முற்றும் உடையவர் கடவுள் ஒருவரே. அவருக்கு உரிமையான இவ்வுயிர்க ளிடத்தும் பொருள்களிடத்தும் அன்பு வைத்து ஒழுகுதல் இனிது. பற்று வைத்து ஒழுகுதல் தீது. தம்முடைய அல்லாதவற்றைத் தம்முடையன என்று நினைத்துப் பற்று வைத்தலினாலன்றோ மக்கள் சொல்லற்கரிய துன்பக் கடலிலே கிடந்து உழல்கின்றனர்! உள்ள மட்டும் உரிய கடமைகளைச் செய்து அவரவர் தாந்தாம் வேறு வேறு செல்லுதற்குரிய வழிகளிற் பிரிந்து போகும்போது, பற்றில்லாதவர்களுக்கு எவ்வகைத் துன்பமும் வருவதில்லை. வழிப்போக்கர்கள் ஒரு பெரும் பாட்டையில் ஒன்று கூடிச் செல்லும்போது ஒருவரோடொருவர் அளவளாவி மிக மகிழ் வராயினும், அவர்கள் தனித்தனியே பிரிந்து வெவ்வேறு

வழிகளிற் செல்லுங்காற் சிறிதும் பற்றின்றிப் போவதுபோல, இவ்வுலகமென்னும் பெரும்பாட்டையில் வந்த வழிப்போக்கர் களான நாம் நமக்குரிய கடமைகளை மகிழ்ந்து நிறைவேற்றிப் பற்றின்றி இருக்க வேண்டுமேயன்றோ? ஆனால் உலகத்திலிருக் கின்ற மக்கள் அப்படி நடக்கின்றார்களாவென்றால், ஆ! சிறிதும் அவர்கள் இவ்வுயர்வழியிற் செல்கின்றாரில்லையே! இஃது என் வீடு என்கின்றார்கள், என் நிலம் என்கின்றார்கள், பிறன் என் வீட்டுத் திண்ணையிலும் இருக்க இசையேன் என்கின்றனர்! என் நிலத்திற் பிறன் நடக்கவும் உடன்படேன் என்கின்றனர்! ஆ ! இவர்கள் வீடாயின், இவர்கள் நிலமாயின், இவர்களே என்றும் அவற்றிற்கு உரியவர்களாக இருக்க வேண்டுமன்றோ? இவர்கள் அவற்றிற்கு உரியவர்களாயது எத்தனை நாள்! எத்தனை திங்கள்! அவர்கள் எமது என்று சொல்லிய வாய் மூடுவதற்குள்ளும் இறந்து போகக் கண்டோமே! உயிர் இருந்தும் உணர்விழந்து போகவுங் கண்டோமே! என் மனைவி, என் மக்கள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/45&oldid=1575997" இலிருந்து மீள்விக்கப்பட்டது