பக்கம்:மறைமலையம் 4.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

27

வல்லானது ஓவியமுங் கண்ணுஞ் செவியும் மகிழ ஆடும் நாடகக்காரனது நடையும் நல்லிசைப் புலவன் செய்யுளைப் போல் எக்காலத்தும் நிலைபெற்ற இன்பத்தைத் தரமாட்டா. அவர்கள் விளைக்கும் இன்பங்கள் எல்லாம் ஐம்பொறிகளின் நுகர்ச்சியளவாயுள்ள சிற்றின்பங்களாய் ஒழிகின்றன. நல்லிசைப் புலவன் விளைக்கும் இன்பமோ உயிரின் அறிவு நுகர்ச்சிக்கண் விளையும் பேரின்பமாய் நிலை பெறுகின்றது. இத்தனை விழுமியதாகிய பேரின்பத்தினை விளைக்கும் பேராற்றல் நல்லிசைப் புலவனுக்கு எங்ஙனம் வந்தது? அவன் அவன் பல் பிறவிகளிலும் பழகிப் பழகிப் பழுக்க வைத்த உள்ள வொருமையால் வந்ததாகும். இவ்வுள்ளவொருமை, ஓவியக் காரன், நாடகக்காரன், இசைக்காரன் பழகிய உள்ள வொருமை யினும் மிக மேம்பட்ட வலிமை வாய்ந்ததாகும். எங்ஙனமென்றால், ஓவியக்காரன் முதலான எல்லாரும் பொறிகளுக்குப் புலனாய்த் தோன்றும் உலகியற் பொருள்களின் வெளித்தோற்றங்களை மட்டுமே உற்றுணர்ந்து காட்ட வல்லராவர். நல்லிசைப்புலவனோ அவ்வுலகியற் பொருள்களின் வெளித்தோற்றங்களோடு அத்தோற்றங்களின் அகத்தே நிறைந்த இறைவன் அருள் ஒளியையும், அவ்வுலகியற் பொருள்களினும் மிக மேம்பட் உயிர்களின் உண்மை நிலையையும் அவ்வுயிர்களுள் உயிராய் நிறைந்த கடவுளின் இன்பக் கனிவையும் ஆழ்ந்து செல்லுந் தனது மெய்யறிவால் ஒன்றுபட்டு நின்றுணர்ந்து, உயிர் இளகி உணர்விளகி உரைததும்ப உடல் சிலிர்க்க அமிழ்தமழை பொழிந்ததென அழகிய செய்யுட்களைத் திருஞானசம்பந்தப் பெருமானே போற் பொழிந்திட வல்லனாதலால், அந் நல்லிசைப் புலவனுக்கு வாய்ந்த உள்ளவொருமையின் அழுத்தத்தையும் விழுப்பத்தையும் எங்ஙனம் எடுத்துரைக்க வல்லேம்! உலகத்திற் பிறந்த உயிர்களில் எல்லாம் மக்களுயிரே சிறந்ததாகும். அம்

மக்களுயிர்களினும் நல்லிசைப் புலவனே தன் உள்ள

வொருமையின் மேம்பாட்டால் தெய்வமேபோல் விளங்கு கின்றான். அறிவுப் பொருள்கள் அறிவில் பொருள்கள் இயல்பெல்லாம் முற்றும் உணர்ந்து உள்ள வொருமை மிகப் பெற்றவன் நல்லிசைப் புலவன் ஒருவனே யாகையால், அவன்தன் சொல்லாற் பிறரை ஆக்கவும் அழிக்கவும் வல்லனாவன். இது பற்றியன்றோ, நல்லிசைப் புலவர்களாற் புகழ்ந்து பாடப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/60&oldid=1576012" இலிருந்து மீள்விக்கப்பட்டது