பக்கம்:மறைமலையம் 4.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம் – 4

அவனுக்குச் சிறிதுங் கைகூடாமற் போம். பகுத்தறிந்து ஒழுகும் நிலையிலோ ஒருவன் தனக்கென ஒன்றும் வேண்டிடாமல், உலக அமைப்புகளை வியக்கும் வழியே சென்று ஆண்டவனை நினைவு கூருந்திறம் வாய்க்கப்பெறுதலால், அதுவே ஒருவன் திருவருளைப் பெறுதற்கும், அத் திருவருள் வல்லமையால் மன ஒருமை மிகப் பெற்று எல்லாவுயிர்களையுந் தன்வழிப்படுத்தி நல்வழி காட்டுதற்கும் உரிமையினை உண்டாக்கும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படும் எல்லாப் பொருள்களையும் பகுத்தறிந்து பெற்றுப் பயன்படுத்தப் பாருங்கள். ஆனால், அவற்றிலே பற்று மிக வைத்து அவைகள் எல்லாம் உங்கட்கே வேண்டுமென்று நினையாதீர்கள்! 'தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு” என்னுந் திருவள்ளுவனார் திருக்குறளை எக்காலும் இடைவிடாது கருத்தில் இருத்துமின்கள்! ஏராளமான பொருளைத் தேடுதற்கு முயலுமின்கள்! ஆனால், அப் பொருண் முழுதும் நான் பிறவுயிர்கட்கு நன்மை செய்தற் பொருட்டு ஆண்டவன் எனக்குத் தந்தருளினான் என்று கருதி, அதனை எல்லார்க்கும் வழங்கி இன்புறுமின்கள்! பாருங்கள் எண்ணிறந்த கோடி உயிர்கட்கு எண்ணிறந்த கோடி உடம்புகளையும், அவ்வுடம்புகளோடு இயைந்து அவ்வுயிர்கள் உலவ எண்ணிறந்த கோடி உலகங்களையும், அவ்வுலகங்களில் அவ்வுயிர்கள் நுகர்தற்கு

எண்ணிறந்த நுகர்ச்சிப் பொருள்களையும், அவைகளை யெல்லாம் நுகர்தற்கு ஏற்ற கண் செவி மனம் முதலான அகக்கருவி புறக்கருவிகளையும் எல்லாம்வல்ல ஆண்டவன் எவ்வளவு இரக்கத்தோடும் எவ்வளவு அருளோடும் படைத்துக் கொடுத்திருக்கின்றான்! அங்ஙனம் அவன் இவற்றை யெல்லாம் உங்களுக்குப் படைத்துக் கொடுத்தது உங்களிடம் ஏதெனும் ஒரு கைம்மாறு பெறுதற் பொருட்டா? இல்லையே! அல்லது அவற்றைப் படைத்துக் கொடுத்தமையால் தனக்கு ஏதேனும் ஒரு நன்மை உண்டென்று அம் முதல்வன் கருதினனா? அதுவும் இல்லையே! ஏழையுயிர்களுக்கு இன்பத்தைத் தரல் வேண்டு மென்னும் இரக்கம் அன்றோ, அறியாவுயிர்களுக்கு அறிவு தரவேண்டும் என்னும் அருள் அன்றோ அவனை இங்ஙன மெல்லாம் உதவி புரியும்படி ஏவின! அவன் தனக்கொன்றும் வேண்டாது எல்லாவுயிர்கட்கும் நன்மை செய்வது போல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/69&oldid=1576021" இலிருந்து மீள்விக்கப்பட்டது