பக்கம்:மறைமலையம் 4.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மறைமலையம் – 4

மனைவி மக்களையே நினைந்திருக்கும் அல்லாமல் வேறு திருவருளொளியைச் சிறிதும் நாட மாட்டாதாகும். மனைவி மக்களுடன் கூடி இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் பற்று வைத்தொழுகுதற்கு அன்று, பகுத்தறிந்து ஒழுகுதற்கேயாம். இவ்வுண்மையை இனிதுணர்ந்த தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்,

“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம், விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு”

(குறள் 81)

என்று அருளிய திருக்குறளைக் கடைபிடித் தொழுகுதலே இல்லறத்திலுள்ளார் தமது நினைவைத் தூயதாக்கி ஒரு வழியில் நிறுத்துதற்குச் சிறந்த வழியாகும் என்க.

இனி, மக்கள் மனம் இந் நிலவுலகிற் பிறந்தகாலந் தொட்டுப் புறப்பொருள்களிடத்து ஓடிஓடி அவற்றின் மேற் பற்று வைத்து வைத்து ஒழுகுதலால், அத் தன்மைத்தாகிய அம் மனத்தைச் சடுதியிலே அகமுகமாய்த் திருப்பப் புகுந்தால் அது சிறிதும் வழிப்பட மாட்டாது. ஒருகால் மிக வருத்தப்பட்டு அஃது அகத்தே திருப்பப்பட்டாலும், பற்றுவைத்த புறப்பொருள் நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாய் எழுந்து அக நினைவினை மறைத்துக் கொள்ளும். அஃது எதுபோலவென்றாற், பாகன் வயப்படாது வழிதுறை தெரியாமல் விரைந்து ஓடும் ஒரு முரட்டுக் குதிரையினைத் திடுமெனப் பிடித்து நிறுத்தப் புகுந்தால், அதற்குச் சிறிதும் படியமாட்டாது அல்லது பிடித்து வலிந்து நிறுத்தினாலும், அது தனக்குரிய முரட்டுத் தன்மையாற் சினங்கொண்டு பாகனையும் அருகிலுள்ளவர்களையும் உதைத்துக் கடித்துத் தீங்கு செய்யும். பின்னை அதனை அடக்கும் வகை அறிந்தவன், அஃது ஓடுமிடமெல்லாம் அதனைவிட்டு, அஃது அவ்வோட்டத்தால் இளைப்புற்று ஓடமாட்டாது நிற்கும் நேரங் கண்டு அதனைப் பிடித்துப் பழக்கி வழிப்படுத்துவான். அது முற்றுந் தன்வயப்படுங்காறும் அதற்குத் தீனி முதலியன வெல்லாங் குறைவாகவே வைப்பான். இந்த முறையிலே வைத்துக் குதிரைபோலவுங் குரங்கு போலவும் ஒரு நிலைப்படாது சுழலும் L மனத்தை ஒரு வழியிலே நிலைப்பித்தல் வேண்டும். மனமென்னுங் குதிரையின் முரட்டுத் தன்மை யாதெனின், அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/71&oldid=1576023" இலிருந்து மீள்விக்கப்பட்டது