பக்கம்:மறைமலையம் 4.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைமலையம் - 4

உணரவில்லை. அதன்பின் அவரது பின் கையைக் கிள்ளிப் பார்த்தார். அதனையும் அவர் அறியாமற் பெருங்கிளர்ச்சி யோடும் பேசிக் கொண்டே போனார். அதற்குமேல் ஒரு குண்டூசியை எடுத்து அவரது காலின் கெண்டைச் சதையினுள் நன்றாய்ப் பதியக் குத்தினார், அதனையும் அவர் சிறிதும் உணர்ந்திலர். இங்ஙனந் தம்மால் ஆனமட்டும் முயன்று பார்த்தும் அவைத்தலைவர் அவரை நிறுத்த முடியாமை கண்டு வாளா இருந்துவிட்டார். கடைசியாக அவ் விரிவுரைகாரர் தாம் பேச எடுத்த பொருளை முடித்துக் களைப்போடும் அவைத் தலைவர் பக்கமாய்த் திரும்பி, “யான் பேசுதற்குக் குறித்த காலம் ஆயிற்றா?” என்று கேட்டார். "அது கடந்து நெடுநேரம் ஆயிற்று” என்று அவைத் தலைவர் விடை பகர்ந்தார். “அங்ஙன மாயின் அதனை ஏன் நீங்கள் எனக்கு அறிவிக்கவில்லை?” என்று அவ்விரிவுரைகாரர் கேட்டார். அதற்குப் புன்சிரிப்போடும் அவர் "இதோ உங்கள் கெண்டைக்காலைப் பாருங்கள். இதுதான் கடைசியாக உங்களுக்கு யான் தெரிவிக்கச் செய்த வழி, இதுவும் பயன்படவில்லை” என்று ஊசி குத்தியிருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டி அதனை அவர் காலினின்றும் பிடுங்கினார். உண்மையாக நிகழ்ந்த இந் நிகழ்ச்சியினால், ஒருவர் உள்ளமுங் கண்ணும் ஒன்றுபட்டு உயர்ந்ததொரு பொருளை நாடி நிற்குங்கால் உடம்பிற்கு எவ்வகை வேறுபாடு நேரினும் அதனை அவர் ஒரு சிறிதும் உணரார் என்பது தெற்றென விளங்கு கின்றதன்றோ? பேருணர்வோடும் மிகுந்த மனக் கிளர்ச்சியோடும் ஓரரிய பொருளை எடுத்துப் பேசுவார் ஒருவரின் கண்களை நோக்கினால் அவை இமையாமல் திறந்தபடியே இருத்தலைக் காணலாம். மனம் ஒருவழிப்பட்டு நின்றாலல்லாமற் சொற் பொழிவு செய்யுந்திறம் வாய்ப்பது அரிதாகலின், கிளர்ச்சியான விரிவுரைகள் நிகழ்த்துவோர்க்குக் கண்கள் இமையாமல் நிற்கின்றன.தேவர்கள் நிற்கின்றன. தேவர்கள் இமையா நாட்டத்தவரென்பதனை எண்ணிப் பார்க்குங்கால், அவர்களது உள்ளம் எப்போதும் ஒருவழிப்பட்டு நிற்குமெனவும், அதனால் தம் கண்கள் இமையாதிருக்கப் பெற்றனரெனவும் அறிகின்றோம்.

இனிப் பிறவுயிர்களைக் கண்களின் வழியாக வசியப் படுத்தும் ஆற்றல் மக்களினுந் தாழ்ந்த உயிர்களினிடத்துங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/85&oldid=1576037" இலிருந்து மீள்விக்கப்பட்டது