பக்கம்:மறைமலையம் 4.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

61

பெருவெளியிலே இடையிடையே தோன்றும் மின்மினி விளக்கம் போலப், புன்முதல் மக்கள் தேவர் ஈறான எல்லாச் சிற்றுயிர் களின் எண்ணங்களும் மிளிர்கின்றன. இச் சிற்றுயிர்களின் எண்ணங்களுள்ளும் இறைவனது பேரெண்ணம் ஊடுருவிப் பொலிகின்றது. அவற்றின் புறம்பேயும் அது தொடர்புபட்டு நின்று எல்லா வுயிர்களின் எண்ணங்களையும் யைத்து வைக்கின்றது. மாசற்ற ஒரு பளிங்குருண்டையின் உள்ளே நடு மையத்தில் வைக்கப்பட்ட மின்னொளியானது (Electric light) அவ்வுருண்டை முழுதும் ஊடுருவி நிறைந்து அதனை விளங்கச் செய்யுமாறு போல, அறியாமை நீங்கிய தூய உயிரின் அகத்தே யுள்ள இறைவனது அருளொளியானது அவ்வுயிர் முழுதும் நிறைந்து அதனை விளங்கச் செய்யும். அதுமட்டுமோ, அவ்வருளொளி மாசு நீங்கிய தூய உயிர்களெல்லாவற்றோடும் விளக்கமாகத் தொடர்புபட்டு நிற்றலால் தூயதான ஓருயிரின் நல்லெண்ணந் தன்போற் றூயதான வேறு பல்லுயிர்களின் எண்ணங்களோடும் உடன் இயைந்து அரியபெரிய முயற்சிகளை யெல்லாம் நிறைவேற்ற வல்லதாகும். தூயவான அவ்வுயிர்க ளெல்லாவற்றிலும் பிரிவறக் கலந்து விளங்கும் இறைவனருள் எல்லாவுயிர்களுக்கும் பேரின்பத்தைத் தரல் வேண்டும் என்னுந் தனிப்பெரு நல்லெண்ணம் வாய்ந்த இயற்கையுடையதாகையால், அஃது அத்தூய உயிர்கள் எண்ணிய எண்ணங்களையெல்லாம் எளிதிலே நிறைவேற்றி வைக்கும். எனவே, நன்முயற்சியடையார் ஒவ்வோருவருந் தம்மைப்பற்றிய அறியாமையை நீக்கித் தாம் துவங்கிய ஒரு நன்முயற்சியில் அது முடியுங்காறுந் தமது எண்ணத்தை நிலைபெற நிறுத்தல் வேண்டும். எண்ணம் ஒன்றிலே நிலைபெற நிலைபெற அதனைப்பற்றிய அறியாமை தேயும். மலைப்பக்கத்திலுள்ள தனிமையான ஓர் அழகிய ஏரியில் நீர் பருகும் ஓர் எருதின் வடிவத்தை ஓவியத்தில் எழுதும் எண்ணம் உடைய ஓவியக்காரன் ஒருவன் அம் முயற்சியில் தன் எண்ணத்தைச் செலுத்தாமல் வேறு பலவற்றில் அதனை ஓட விட்டுக் கொண்டிருப்பனாயின் அதனை எழுதமாட்டுவனா? மாட்டானன்றோ? அங்ஙனமே, அது பலமுகமாய் ஓடுமாறு விடுவதைவிட்டு, அவ்வெருதின் வடிவத்தையும் அவ்வேரியின் அமைப்பையும் உற்றுநோக்கி எண்ணத்தை அவற்றின்கட் பிசகாமல் நிறுத்துவனாயின், அப் பொருள்களின் அமைப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/94&oldid=1576046" இலிருந்து மீள்விக்கப்பட்டது