பக்கம்:மறைமலையம் 5.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தொலைவிலுணர்தல்

19

மனவெளியிற் பரவுதலால் ஒருவருடைய கருத்துகள் மற்றொருவர் உள்ளத்திலுந் திடீரெனத் தோன்று கின் றன. இவ்வாறு நினைவுக் கலப்புகள் தோன்றுவது உயிரோடு இருப்பவர் தமக்குள் மட்டும் அன்று. நில வுலகத்தின்மேல் உலவும் இப் பருவுடம்பை விட்டு நுண்ணுடம்புகளில் நுண்ணிய உலகங்களில் உலவும் பேய்கள் தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் முதலியோர் நினைக்கும் நினைவுகளும் இங்குள்ள மக்கள் உள்ளத்திற்றோன்றா நிற்கின்றன. இங்குள்ள மக்கள் நினைவுகளும் மேலுலகங்களிலுள்ள தேவர் முனிவர் முதலான உயிர்களின் உள்ளங்களில் எழுகின்றன. ஆகவே, இங்குள்ளவர்களான நாம் நினைக்கும் நினைவுகள் அவ்வளவும் நம்முடையனவே என்று எண்ணி அகம் மகிழ்தற்கு இடம் இல்லை. நம் நினைவுகளிற் பெரும்பாலான பிறருடையனவேயாம்; நமக்கே உரியனவென்று உரிமை பாராட்டுதற்கு இயைந்தன மிகச் சிலவேயாகும். அங்ஙனமாயின், நம் நினைவுகளிற் சில நல்லனவாயும் பல தீயனவாயும் இருத்தலால் இவற்றில் எவை நம்முடையன வென்று சொல்லுதற்கு ஏற்பன? எவை ஏலாதன? அல்லது, நன்மை தீமை எவற்றிற்குமே நாம் உரியவர்கள் அல்லமோ; அவற்றிற்கு நாம் உரிமையுடையர் அல்லராயின் அவற்றால் நாம் இன்புறுவதுந் துன்புறுவதும் என்னை? என்று பலவாறு வினாவுதற்கு ஏதுவான ஐயம் உண்டாகுமாதலால், அம் முறையை இங்கு ஒரு சிறிது விளக்குவாம்.

நல்லனவுந் தீயனவுமாய்க் கலந்து நம்முள்ளத்தில் உண்டாகும் நினைவுகளிற் பெரும்பாலான நமக்கே உரியன ஆகாவிட்டாலும், அந் நினைவுகளை ஏற்றுக்கொள்ளுதற்கு இயைந்த ஒரு தன்மையை நாம் நம்மிடத்திற் செய்து கொள்வதனால், அவற்றால் வரும் இன்ப துன்பங்களை அடைதல் நமக்கே உரியதாயிற்று, நம்முடைய மனம் நன்னினைவுகள் நினைப்பதிலேயே பழகி விடுமானால், தூய நல்லியல்பு உடையதான அம் மனம் மற்ற நல்லுயிர்களின் நன்னினைவு களையே ஏற்று அவற்றால் இன்புற்றிருக்கும்; அவ்வாறன்றித், தீய நினைவுகளை நினைப்பதிலேயே பழகி விடுமானால் தூய்தல்லா வியல்பு உடைய அது மற்றப் பொல்லாவுயிர்களின் பொல்லாத நினைவுகளையே ஏற்று அவற்றால் துன்புற்றுச் சுழலும். தூயது தூயதையே கவரும், அழுக்கோ அழுக்கினையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/52&oldid=1576493" இலிருந்து மீள்விக்கப்பட்டது