பக்கம்:மறைமலையம் 5.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தொலைவிலுணர்தல்

21

புலப்படுத்தும். இத்தகைய பேய்கள் நன்னினைவும் நற் செய்கையுந் தூய்மையும் உள்ள மாதர்களிடத்தும் ஆடவரிடத்தும் அணுகக் கேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. சாக் காட்டு மந்திரஞ் செய்யும் மந்திரகாரர்கள் முன்னமே தெரிந்து கொள்ளாமல் நல்லவர்கள்மேற் கொடிய பேய்களை ஏவிவிட்ட போது. அவைகள் அந் நல்லவர்களிடம் வந்து அவர்கள் நன்னினைவுந் தூய்மையும் உள்ளவர்களாய் இருப்பதைப் பார்த்து அவர்களிடம் அணுகக் கூடாமல் திரும்பிப் போய்த் தம்மை ஏவின மந்திரகாரரையே கொன்ற வரலாறுகள் பலவற்றை நூல்களிற் கற்றறிந்திருக்கின்றேம். உலக வழக்கத்திலுங் கண்டிருக்கின்றேம். ஆகவே, தீயனவும் நல்லனவுந் தம்மை வந்து அணுகுதற்கு மக்கள் தாமே இடந் தருபராக இருக்கின் றனர். முதலிற் றீய எண்ணஞ் சிறிது கொள்வார்களானால் அதனைப் பெரிதாக்குதற்குத் தீயோர் பலர் அவரிடம் வந்து சேர்குவர்; முதன் முதல் நல்லெண்ணஞ் சிறிது கொள்வராயின் அதனையும் வலுப்படுத்து தற்கு நல்லோர் பலர் அவரிடம் வந்து சேர்ந்திடுவர். இவ்வுண்மை உலகம் எங்கும் பிறழாமல் நடைபெறுகின்றது. பாருங்கள், நிலத்தில் ஒரு சிறு எட்டி விதையை ஊன்றினால் அது தன்றன்மைக்கு இயைந்த பொருள்களையே உணவாகக் கொண்டு முளைத்து மரமாகி மிகக் கசக்கும் பல்லாயிரம் எட்டிப் பழங்களைத் தருகின்றது; அவ்வாறன்றி, ஒரு தேமாவின் விதையை ஊன்றினால் அது தன் றன்மைக்கியைந் தவற்றையே உணவாகக் கொண்டு முளை கிளம்பிப் பருமரமாகிப் பல்லாயிரந் தேமாம் பழங்களைப் பலர்க்கும் உதவித், தானும் பயன்பட்டுப் பிறரையும் மகிழ்வுறுத்து கின்றது. உயிர் வகைகளில் மிகத் தாழ்ந்த ஓரறிவுடைய மரம் முதலியவற்றிற் காணப்படும் இவ்வியற்கை ஆறறிவுடைய மக்கள் வரையிற் சிறிதும் பிறழ்ச்சியில்லாமற் காணப்படுகின்றது. இவ்வுண்மையை ஆழ்ந்து ஆராயுங்கால், உயிரோடிருப்பவர் நினைவுகளையும் உயிர் துறந்து நுண்ணுடம்புகளில் இருப்பவர் நினைவுகளையும் ஏற்றுக்கொள்ளும் இருவகைப்பட்ட தன்மை களையும் தம்மிடம் புலப்படக் காட்டும் மக்களே அந்நினைவு களால் தாம் அடையும் இன்ப துன்பங்களுக்கு உரியர் ஆதல் புலனாகாநிற்கும்.

இனி, இம் மனவெளியின் இயல்பையும் அதிற் றமது உள்ளத்தை நிறுத்தும் முறையையும் அறியா திருக்கையிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/54&oldid=1576507" இலிருந்து மீள்விக்கப்பட்டது