பக்கம்:மறைமலையம் 5.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் – 5

குளிரைப் பொறாது, வெயிலைத் தாங்காது; அவன் கைகளும் மற்ற உறுப்புகளும் அனிச்ச மலரினும் மெல்லியனவே. உயிர்களுக்கு அறிவு மிகுதிப் பட மிகுதிப்பட அவைகளிருக்கும் உடம்புகளும் வரவர மென்றன்மை உடையனவாகும்; அறிவு கடைசியில் மிக நுண்ணிதாய் வளர்ந்து முற்றிய பிறகு உடம்பானது காற்றினும் நொய்தாய் இந் நிலவுலகில் இயங்காமல் விசும்பில் இயங்கவல்லதாகும். இதனாலன்றோ அறிவின் மிக்க சித்தர்களும் முனிவர்களும் தேவர்களும் நிலத்தில் இயங்காமல் வான்வெளியில் உலவுகின்றனர்? ஆகவே, உடம்பின் உணர்வானது மிக நுட்பம் உடையதாம்படி செய்துகொள்வது மனத்தை ஒருவழிப்படுத்துதற்கும், அறிவை மிகுதிப்படுத்துதற்கும் உதவியான பழக்கமாகும்.

.

இனி, உடம்பினுஞ் சிறிது நுண்ணிய இயல்பு வாய்ந்த வாயுணர்வும் ஒருவனது அறிவின் ஏற்றக்குறைச்சலுக்கேற்பப் பல திறப்பட்டுத் தோன்றுகின்றது. மட்ட அறிவுள்ளவன் தான் உண்ணும் பண்டத்தின் சுவையையும் நேர்த்தியையும் பாராமல் தன்பசி அடங்கு மட்டுங் கஞ்சியோ கூழோ கிடைத்ததை நிரம்ப உண்ணுகின்றான். நுண்ணறிவு மிக்கவனோ தான் உண்பது சிறிதாயிருந்தாலும் அது சுவை மிக்கதாய் நறுவிதாகச் சமைக்கப் பட்டதாய் இருந்தால் மட்டுமே மனம் உவந்து உண்கின்றான். சிலர் காரம் மிக்கவற்றைக் கண்ணீர் ஒழுகவொழுக அருந்து கின்றனர்; வேறு சிலர் புளிப்புக் காடியாய் இருப்பதனைப் பார்ப்பவர் வாயுங் கூச விழுங்குகின்றனர். இவையெல்லாம் நுண்ணறிவுடையார்க்குச் சிறிதும் பொருந்தாதனவாம்; அறுசுவைப் பண்டங்களையும் அளவாக ஒவ்வொன்றைனையும் நன்கு சுவைத்துப் பார்த்து இன்புற்றுச் சிறிதே அருந்தி ஒழுகுவதே அவர் தமக்கு இயற்கையாம்; தித்திப்பு; துவர்ப்பு, கைப்புச் சுவையுள்ள பொருள்களை விரும்புதல்போல, அவர் புளிப்பு, கார்ப்பு, உவர்ப்புச் சுவைகளை விரும்பமாட்டார். அறிவிற் குறைந்தவர்களுக்கே புளிப்பு, கார்ப்பு, உவர்ப்புச் சுவைகள் மிகவும் வேண்டப் படுவனவாகும். ஒருவர் உண்ணும் உணவுப் பொருள்களின் அளவையும் இயற்கையையும் ஆராய்ந்து பார்த்து அவர்கள் அறிவும் இயல்பும் இப்படியிருக்கு மென்று செவ்வையாக அறிந்துகொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/57&oldid=1576534" இலிருந்து மீள்விக்கப்பட்டது