பக்கம்:மறைமலையம் 5.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தொலைவிலுணர்தல்

29

கடைப்பிடிக்க, இங்ஙனம் மெய், வாய், கண், மூக்குச், செவி என்னும் ஐம்பொறிகளின் வழியே புறத்துச்செல்லும் மனவுணர் வினை நுட்பம் ஆக்கியபின், அகத்தே செல்லுங்காலும் அது மேலு மேலும் நுட்பமாகும் படி அதனைப் பழக்கி வருதல் வேண்டும். அகத்தே மனவுணர்வு நடைபெறுங்காலத்து அஃது அமைதியுற்று நுணுகாமல், வருத்தங், கவலை, அச்சஞ், சினம், பொறாமை, அவா முதலான பல தீய தன்மைகளால் தாக்கப் பட்டு, நிலைகலங்கி வலிவுகுன்றிப் போகின்றது. இவ்விழிந்த தன்மைகளின் இயல்பையும் இவற்றின் சேர்க்கையால் ஆவியின் வலிவு குறைந்து போதலையும் யோகநித்திரையைப் பற்றிப் பேசிய எமது நூலில் மிக விரித்து விளக்கியிருக்கின்றேன்; அவற்றை அணுகவிடாமல் உள்ளத்தை ஒருநிலைப் படுத்தும் வகை யினையும் அங்கே காட்டியிருக்கின்றேம். அம் முறைகளை நன்றாக நினைவில் இருத்தி அவற்றின்படி நடந்துவரின் மிக எளிதிலே உள்ளமானது ஒருநிலைப்படும். இன்னும் மனிதவசியம் என்னும் எனது நூலிலும் ‘நினைவை ஒரு வழி நிறுத்தல்' என்னுந் தலைப்பின் கீழ்ச் சொல்லிய முறைகளும் பெரிதும் நினைவு கூர்ந்து பழகற் பாலனவாம்.

இனி, இவ்விடத்தும் இதற்குரிய முறைகள் சிலவற்றை எடுத்துக் கூறுவாம்; இழிந்த தன்மைகளுள் எதுவும் வந்து நுழைய வொட்டாமல், எந்நேரமும் நமது உள்ளத்தை நல்நினை விற்கு இடமாம்படி செய்தல் வேண்டும் தெளிந்தோடும் ஒர் யாற்றுநீரானது, சாக்கடை நீரின் சேர்க்கையால் அழுக்குற்று அருவருக்கத் தக்கதாய் விடுதலும், மலைப் பாறைகளிலிருந்து முத்து முறியென ஓடிவரும் இனிய நீரின் கலப்பால் மிகத் தெளிந்து விளங்குதலும் போலத், தீய நினைவுகளின் சேர்க்கையால் தெளிவான உள்ளமும் அழுக்குப்பட்டுக் கலங்கலாதலும், நல்நினைவுகளின் கூட்டுறவால் அது மேலுமேலுந் தூய்மை எய்தி விளங்குதலும் நேர்கின்றன. முடைநாற்றம் வீசுந் தீய பொருளொடு கூடிக் கலங்கல் அடைந்த நீர் தன்னை அடுத்துள்ள பொருள்களையுந் தன்கண்ணே காட்டமாட்டாது; அதுபோலத் தீய நினைவின் வழிப்பட்டுக் கலங்கல் எய்திய உள்ளத்திற்கும் அருகே நிகழும் எண்ணங்களுந் தோன்றாது மறையும். அதுவேயுமன்றி அது நினைவுவலிமையினையும் வரவர இழந்துவிடும். அங்ஙனமின்றி, நன்னினைவொடு பொருந்தி நின்ற உள்ளமோ தெளிவுபெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/62&oldid=1576576" இலிருந்து மீள்விக்கப்பட்டது