பக்கம்:மறைமலையம் 5.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தொலைவிலுணர்தல்

35

தொலைவிலுணரும் நிகழ்ச்சிகளைப் பற்றித் தாம் ஆராய்ந்த பலவற்றுள் ஒன்றைப்பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்:-

“பி.என்னும் பெருமாட்டியார் தமக்குள்ள தலைநோயைப் பற்றி என்னிடம் முறையிட்டார். யான் எனது கையை அவ் வம்மையாரின் நெற்றிமேல் வைத்தேன், சில நேரங் களிலெல்லாம் அவர் ஓர் இழைந்த அறிதுயில் வரப்பெற்றார்; அவ்வுறக்கத்தை மிகுதிப்படுத்தாமலே யான் அவரிடத்தில் அமைதியையும் நலத்தையும் பற்றிய உணர்வை எழுப்ப முயன்றேன்; அதற்கு, முதலில் என்னிடத்தே அவ்வுணர்வை எழுப்புவித்துக் கொள்ள வேண்டிக், காற்றுந் தண்ணீரும் பகல் வெளிச்சமும் நிரம்பி விளக்குங் கடற் காட்சியினை என் நினைவிற் கொண்டுவந்தேன். அங்ஙனம் யான் என்னுள் உணரத் துவங்கிய வுடனே, அம் மாதரார் 'யான் இப்போது சிறிது நலமாயிருப்பதாக உணர்கின்றேன்; காற்று எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கின்றது!' என்று கூறினார். அதன்பிறகு யான் பூல்வார்டு செயிண்டு மிக்கல் என்னும் இடத்திற் சிறிது துளிக்கும் மழையில் நடப்பதாக என்னுள் எண்ணப் புகுந்தேன்; அவ்வாறு எண்ணவே, விரைந்து செல்லும் மக்களையுங் குடைகளையும் என்னுட் காண்பே னாயினேன். உடனே அந்த அம்மையார் ‘ஈது என்ன புதுமையா யிருக்கின்றது! யான் பூல்வார்டு செயிண்டு மிக்கல் என்பதன் கோடியில் இருப்பதாக எனக்கு ஒரு தோற்றமுண்டாகின்றது. மழை பெய்கிறது; மக்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; கூட்டமாய் விரைந்து செல்லுகிறார்கள். அவர்களெல்லாருந் தெருவின் மேற் செல்லு கிறார்கள்; யானும் அவர்களொடு செல்லுகிறேன். காற்று மிகவுங் குளிர்ச்சியாயிருக்கிறது. அஃது எனக்கு இனிய இளைப்பாறும் உணர்வைத் தருகின்றது;' என்றார். இச் சொற்களைக் கூறிய பிறகு அவர் தங் கண்களைத் திறந்தார்; தம் மனத்திற் பதிந்த அவற்றைப் பற்றிப் பின்னும் உறுதியுரை மொழிந்தார்." இங்ஙனமே இத் துரைமகனார் தம்மால் உறங்கச் செய்விக்கப்பட்ட பலரிடத்துத் தாம்நினைந்த நினைவுகள் நினைந்த அளவில் தோன்றும்படி செய்து ஆராய்ந்து பார்த்த ஆராய்ச்சிகள் பல; இத்துரை மகனாரைப் போலவே இன்னும் பலரும் இவ்வாறே ஆராய்ந்து பார்த்து வருகின்றார்கள். இவ்வாராய்ச்சியில், அமைதியுங் குளிர்ந்த காற்றின் உலவுதலும் வாய்ந்த கடற்காட்சியாகிய ஒரு பொருளின் றோற்றத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/68&oldid=1576626" இலிருந்து மீள்விக்கப்பட்டது