பக்கம்:மறைமலையம் 5.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மறைமலையம் – 5

அவ்வாறாயின், தூக்கத்திலும் அறிவு நிகழும்படி செய்யவே, உயிர்களுக்கு இளைப்பாறுதல் இல்லையாய் ஒழியும்; அஃதொழியவே, உடம்பு நிலைகுலைந்து நோய்மிகும். ஆகையால், இஃது உயிர்களுக்கு அறிவு மிகுத்தற்குரிய வழியாதல் யாங்ஙனம் எனிற்; கூறுதும். தூக்கம் என்பது உயிர்கள் இளைப்பாறுதற்கு அமைந்த நிலையேயல்லாமல், அவைகள் அறிவிழந்து கிடத்தற்காக வந்ததன்று. அறிவிழந்து கிடப்பதனாலேதான் உயிர்களுக்கு இளைப்பாறுதல் கூடுமென நினைப்பது பெரும் பிழை. அறிவிழந்த நிலையே இளைப்பாறுதல் ஆகுமென்று உரைப்பின் அறிவே இல்லாத கல் மண் முதலியன எப்பொழுதும் இளைப்பாறுகின்றனவென்றும் அவற்றின் நிலை உயிர்களின் நிலையைவிட மிகச் சிறந்த தாகுமென்றும் அன்றோ கூறுதல் வேண்டும்? அங்ஙனங் கூறுதல் பொருந்தாமையின், அறிவிழப்புக்கும் இளைப்பாறு தலுக்குஞ் சிறிதும் இயைபில்லை யென்பது தெள்ளிதிற் பெறப்படும்.

அவ்வாறாயின், இளைப்பாறுதல் இன்னதென்பதும், தூக்கம் இன்னதென்பதும், ஒருசிறிது விளக்கிக்காட்டுக வெனிற்; காட்டுகின்றாம். நாள் முழுதுஞ் செலவு செய்யப்பெற்ற அறிவு விழைவு செயல்களின் முயற்சியால் உடம்பிலுள்ள ஆவி வலிமை கழிந்துபோகின்றது; கழிந்துபோன அதனைத்திரும்பவும் உடம்பில் உண்டாக்கிக் கொள்வதற்குச் சும்மாயிருப்பதாகிய நிலையே இளைப்பாறுதல் என்று சொல்லப்படும். நாம் நம்முடைய முயற்சிகளைக் கழிந்து போக விடாமற் சிலநாழிகை நேரமேனும் வறிதே இருப்பமாயின், நம்முயிரிலும் உடம்பிலுங் கலந்து நின்று உதவிவரும் இறைவ னருளாற்றலானது நமக்கு வேண்டும். ஆவி வலிமையினை உடனே அவற்றில் நிரப்பிவிடும். நீர் வருங்காலும் வடிகாலும் உடைய ஓர் ஏரியானது ஓயாமல் வடிகாலின் வழியே தண்ணீரை ஒழுகவிட்டுக் கொண்டிருக்கு மாயின், அதன்கண் நீர் நிறைந்திராதென்னும் உண்மை எவரும் அறிந்ததேயாம்! நிலத்திற்கு வேண்டுமளவு நீரைப் போகவிட்டு வடிகாலை அடைத்துவைத்தால் அது வருங்காலின் வழியே மிகுந்த நீரைப்பெற்று நிறைந்திருந்து, பின்னரும் வேண்டும்போது விளை புலங்களுக்கு நீரைக் கொடுத்துப் பயன்படும். அதுபோலவே, நாம் இடையிடையே இளைப்பாறுவதனால், முன்னே செலவு செய்யப்பட்ட ஆவிவலியானது திரும்பத் திரும்ப நம்முள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/71&oldid=1576651" இலிருந்து மீள்விக்கப்பட்டது