82
மறைமலையம் 6 *
யிடத்துச் சென்று யான் அவளால் ஒரு திறமையாகப் பழிக்கப்பட்டேனென்று நான் சொன்னதாகச் சொல்.
விதூஷகன் : தங்கள் கட்டளைப்படியே. (எழுந்து) ஓ நண்பரே! அரம்பை மாதராற் பற்றப்பட்ட முனிவரைப்போற், பிறர் கையைக்கெண்டே இவளால் என் குடுமி பிடிக்கப் பட்டிருத்தலால், எனக்கு அதனினின்றும் விடுதலை இல்லை.
அரசன் : நாகரிகம் உள்ளவனாக முறையாய்ப்போய் இதனை அவளுக்குத் தெரிவி.
விதூஷகன் : வேறுவழி ஏது! (போய்விடுகின்றான்.)
அரசன் : (தனக்குள்) இத் தன்மையான பொருளைத் தரும் இப் பாட்டைக் கேட்டவுடனே, காதலொருவரைப் பிரியா திருக்கையிலும், எனக்கு என் இத்தகைய பெருங் கலக்கம் உண்டாகின்றது? ஒருகால் இப்படியிருக்கலாம்; அழகிய பொருள்களைப் பார்க்கும்போதும் இனிய இசைகளைக் கேட்கும்போதும் இன்பத்தை நுகர்பவனுங் கூடத் தான் அறியாமலே தன் மற்றை உணர்வுகளில் நிலைபேறுற்று நிற்கும் முற்பிறவியின் சார்பு, அந் நேரத்தில் நினைவிலே திண்ணமாய்த் தோன்றப் பெறுகின்றான்; ஆதலினாற்றான் அங்ஙனந் துயரம் எய்துகின்றான். (மனக்கலக்கத்தோடு நிற்கின்றான்.)
(பிறகு கஞ்சுகி என்னும் ஏவலாளன் வருகின்றான்.)
கஞ்சுகி : ஆ! யான் இவ்வளவு மெலிந்த நிலைமையனாய் விட்டது வியப்பா யிருக்கின்றது! அரசனது உவளகத்திற் காவற் றொழிலுக்கு அடையாளமாக நான் தாங்கி வந்த இந்த வெறுங் கோலே, இத்தனைகாலங் கழிந்தபின்பு, நடக்கத் தள்ளாத எனக்கு ஊன்றுகோலாய் வந்து வாய்த்தது. செய்ய வேண்டும் அறத்தின் கடமையானது அரசனால் தள்ளி வைக்கப்படுவ தன்றென்பது உண்மையே; என்றாலும், அவர் இப்போதுதான் அறங்கூறும் இருக்கையை விட்டுச் சென்றாராகலின், கண்ணுவ முனிவர்தம் மாணாக்கரின் வரவை அறிவித்து இன்னும் அவரை நிறுத்தி வைப்பதற்கு மனமில்லாதேனாயிருக் கின்றேன். ஆயினும் என்! குடிகளை ஆளுந்தொழிலுக்கு