112
மறைமலையம் -6
அரசன் : அப்போது, என் பெயர் செதுக்கப்பட்ட இக் கணையாழியை அவள் விரலிலிட்டு, "ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வோர் எழுத்தாக இக் கணையாழியிலுள்ள என் பெயரை எண்ணிக் கொண்டுவா; கடை எழுத்திற்கு நீ எண்ணவரும் நீஎ நாளில் என் கண்மணி! நின்னை என் உவளகத்திற்கு அழைத்து வரும் பொருட்டு ஒரு தூதுவன் நின்பால் வந்து நிற்பன்” என்று அவளுக்கு விடைகூறினேன். பின், கல்நெஞ்சுடையனான நான் மறதியினால் அவ்வாறு செய்யத் தவறிவிட்டேன்.
சானுமதி : ஐயோ! இவ்வளவு இனிதாக ஏற்படுத்தப் பட்ட கால வரையும் ஊழ்வலியால் தவறிப் போயிற்றே!
விதூஷகன் : செம்படவனால் அறுத்துத் திறக்கப் பட்ட அச் சிவப்புமீனின் வயிற்றுள் அஃது எப்படி வந்தது?
அரசன் : சசிதீர்த்தத்தை நின் தோழி குனிந்து வணங் குகையில், அஃது அவள் கையினின்றுங் கழன்று கங்கை வெள்ளத்தில் விழுந்து போயிற்று.
விதூஷகன் : அஃது உண்மைதான்.
சானுமதி : இதனாலன்றோ இவ்வரசமுனிவர்தாம் சகுந்தலையை மணஞ்செய்து கொண்டதனைத் தீவினைக்கு அஞ்சி ஐயமுறுவாராயினர். அஃதிருக்கட்டும், அவ்வளவு மிகுந்த காதலும் ஓர் அறிகுறியினை வேண்டியதென்னை?
அரசன் : நான் இந்தக் கணையாழியைத்தான் குற்றஞ் சொல்லவேண்டும்.
விதூஷகன் : (தனக்குள்) இவர் வெறிகொண்டவர்கள் வழியிற் செல்கின்றார்.
அரசன் :
மெல்லிதா யழகிதாய் விளங்குநீள் விரலுடை அல்லிமென் கையைவிட் டாழ்ந்ததென் நீருளே புல்லிய அறிவிலாப் பொருளவள் நலம்பெற
வல்லதன் றேழையேன் மயங்கிற் றென்னையோ.