278
மறைமலையம் 6
நெக்குருக ஓதி இறைவற்கு வழிபாடு ஆற்றுமாறு உடனே செய்தல் வேண்டும்.
தமிழ்மொழியிலேதான் இறைவனுக்குப் பெருவிருப்பு என்று எம் தமிழ்ப் பேராசிரியர் எழுதியதை ஏளனமாகப் பேசினர் சிலர். உலகத்தில் உள்ள எல்லாரும் நல்ல சொற்களையும் நல்ல சொற்பேசுவாரையுமே விரும்புகின்றன ரன்றித் தீய சொல்லையும், தீய சொற்பேசுவோரையும் விரும்புகின்றனரா? இல்லையே. ஒரு தந்தையானவன் தன் மக்கள் பலருள்ளும் நல்ல சொற்பேசும் நல்ல தன் புதல்வனையே விரும்புகின்றன ரன்றித், தீய சொற் பேசுந் தீய தன் புதல்வர்களை விரும்புகின்றனனா? இல்லையே. அதுபோல் எல்லாம் வல்ல இறைவனும் இனிய தமிழ் மொழியையும் அதனைப் பாதுகாத்து வழங்கிய இனிய தமிழ் மக்களையுமே பெரிதும் விரும்பினான் என்றால் அதில் குற்ற மென்னையோ? பண்டைக் காலந்தொட்டு இது வரையில் வழங்கும் மொழி தமிழைத் தவிர வேறொன்று உண்டென்று விரல்விட்டுக் காட்டமுடியுமா? எகிப்தியம், சாலடியம், அசீரியம், எபிரேயம், கிரேக்கம், இலத்தீன், ஆரியம், சென்டு, பாலி முதலான பழைய ெ மாழிக ளெல்லாம் எங்கே? அவைகளெல்லாம் பேசப்படாமல் மாண்டு மறைந்து போகத் தமிழ் மட்டும் இன்னும் பலகோடி பொதுமக்களாற் பேசப்பட்டு வருவதைத் தாங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?
இறைவனுக்குத் தமிழிற் பெருவிருப்பு உண்மையினா லான்றோ, திருஞான சம்பந்தர் அன்பினாற் குழைந்துருகிப் பாடிய தமிழ்ப் பதிகங்களை நெருப்பில் வேகவிடாதும், நீரில் இழுக்கப்படாமலும் வைத்து இறைவன் அதன் அருமையைப் புலப்படுத்தினான்? இன்னும் பாண்டியன் கொண்ட வெப்பு நோய் தீர்த்ததும், எலும்பைப் பெண்ணாக்கியதும், முதலை வாய்ப் பிள்ளையழைத்ததும் இன்னும் இவைபோன்ற பல அருள் நிகழ்ச்சிகளைக் காட்டியதுந் தமிழேயன்றிப் பிறமொழி அன்றே! அல்லது பிறமொழியில் இத்தகைய அருள் நிகழ்ச்சிகளைத் தக்க அகச் சான்று புறச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டல் இயலுமா? வெறுங் கதைகளாகப் பின்னோ ரெழுதி வைத்திருப்பவைகளைக் காட்டுவது பயன்படாது.