62
நான்காம் வகுப்பு
களம் - ஆசிரமத்திற்கு எதிரே ஒரு புல்நிலம்.
(தோழிமார் பூப்பறித்துக் கொண்டு வருகின்றனர்.)
அனசூயை : அன்புள்ள பிரியம்வதே! காந்தர்வ மண முறையால் சகுந்தலை தனக்கு இசைந்த காதலனை மணந்து கொண்டது பற்றி என்மனம் இன்புற்றாலும், பின்னும் இது கவலைக்கு இடஞ்செய்கின்றது.
பிரியம்வதை : எப்படி, எப்படி?
அனசூயை : இங்குள்ள வேள்விக் கடன்களை முடித்துக் கொண்டமையால் துறவிகளால் போவதற்கு விடைதரப் பெற்றுத் தன் நகரஞ் சென்று தன் உவளகத்து மகளிரோடு கூடியிருக்கின்ற அவ் அரசமுனிவர் இங்கு நடந்ததனை இப்போது நினைவு கூர்வரோ!
பிரியம்வதை : நம்பிக்கையாயிரு. அவரைப்போல் உயர்வொழுக்கமுடையோர் ஒருக்காலும் அறத்தின்முறை தவறார். இப்போது அப்பா கண்ணுவர் இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டால் யாது செய்வரோ அறிகிலேன்.
அனசூயை : யான் ஆராய்ந்து காணக்கூடும் அளவில் அவர் அதனை ஏற்பரெனக் கருதுகின்றேன்.
பிரிம்வதை : எப்படி?
அனசூயை : தம் மகளைத் தக்க ஒரு மணமகனுக்குக் கொடுக்கவேண்டு மென்பதுதான் முதன்மையான விருப்பம்; நல்வினையானது அதனைத் தானாகவே கூட்டி வைக்கு மாயின், பெரியவர்கள் தமக்கு ஏதும் உழைப்பின்றித் தமது கருத்து நிறைவேறப் பெறுவரன்றோ?