பக்கம்:மறைமலையம் 7.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

75

உள்ளம் அன்பினால் நிறைந்து அந்நிறைவின் முடிந்த பதமான காதலாய் வெளிப்படுதற்கு ஏற்ற நிலையில் வந்து நின்றது, அத்தன்மையது தன்னோடு ஒப்பதான துஷியந்தனது காதலுள்ளத்தைக் கண்டவுடனே, தானும் புலனாய்த் தோன்ற லாயிற்று. இதனை, மேனாட்டு நாடக நூலாராய்ச்சியிற் சிறந்த ஓராசிரியர் உரைத்த உரையாற் காட்டுமிடத்துக், “கொழுவிய ஓர் இளமரக்காவின்கண் முகிழ்விரியாத நிறஞ்சிவந்த ஒரு மலரை நாம் காணநேர்ந்து, அங்ஙனங் காணநேர்ந்த அதே நேரத்தில் ஞாயிற்றின் கதிர்கள் அதன்மேல்விழக் கதுமென அது தன் இதழ்கள் விரிந்து ஒரு நொடியிலே புறம் எங்கும் நறுமணம் பரப்புங் காட்சியையும் நாம் உடன்காண நேர்ந்தால், சகுந்தலை காதலிற் கண்விழித்து ஓர் இமைப் பொழுதில் அவள் பிள்ளைமைப் பருவங் கடந்து மங்கைப் பருவம் எய்திய காட்சியையும் நாம் நங் கண்ணெதிரே கண்டவராவோம்." இவ்வாறு துஷியந்தனைக் கண்ட அப்பொழுதே அவன்பால் வரைகடந்த காதலுடையளான சகுந்தலையின் அன்புநிலை, ஆராய்ந்து சென்றும் பிழைபடு வதான அல்லது தன்குறிப்பு நிறைவேறப் பெறாததான அறிவு நிலையினும் விழுமிய தாய்த் தூயதாய்த் திகழ்தலின், ஆண்டு ஆராய்ச்சி நிகழாமைபற்றி வரக்கடவதோர் இழுக்கில்லை யென்றுணர்க. பண்டைத் தமிழ் நூலாசிரியர்க்கும் இதுவே கருத்தாதல்.

66

தானே யவளே தமியர் காணக்

காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்.'

997

என்னும் இறையனாரகப்பொருட் சூத்திரத்தானும், அதற்கு ஆசிரியர் நக்கீரனார் கூறிய உரையானும் உணரப்படும்.

அற்றேற், சகுந்தலைக்கு வந்த துன்பமெல்லாம் அவள் துஷியந்தன் உள்ளத்தை ஆராய்ந்துபாராது அவன்மேற் சடுதியிற் காதல்கொண்டு அவனை மணந்தமையாலன்றோ? ஆதலான், மிக்கதோர் அன்பின்பாற் பட்டுக் காதல் கொள் வாரது நிலை வழுவுதலுறாதென்றது என்னை? சகுந்தலையின் காதலுள்ளம் வழுவியதின்றாயினும், அவளாற் காதலிக்கப் பட்ட அரசன்றன் உள்ளந் தன்னிலையினின்றும் வழுவிய தன்றோ? ஆராயாமற் செய்துகொண்ட மறைவுமணம் இடராகவே முடிதலைச் சார்ங்கரவன் என்னும் மாணவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/100&oldid=1578160" இலிருந்து மீள்விக்கப்பட்டது