பக்கம்:மறைமலையம் 7.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் - 7

அனசூயையே துருவாசர் இட்ட வசை மொழியை யறிந்து அதனைத் தீர்த்துச் சகுந்தலைக்கு நலம் பயப்பவளா

யிருக்கின்றனளே யன்றிப், பிரியம் வதையோ இடுக்கட்பட்ட அந்நேரத்தில் மனவமைதியின்றி விரைந்து சென்று அதனால் தானும் இடறி வீழ்ந்து, அவ்வசைமொழி தீர்த்தற்கும் ஏதுஞ் செய்யமாட்டாதவனாள் விடுகின்றாள் (62).

.

ஆனாலும் பிரியம்வதை சகுந்தலைமேல் வைத்த அன்பு தன்நலங் கருதாது சகுந்தலையின் நலத்தைக் கருதுவ தொன்றாகவே காணப்படுகின்றது. சகுந்தலை தன் கணவனது இல்லத்திற்குச் செல்லவேண்டும் ஏற்பாடுகள் செய்யப்படுதலை ஓர்ந்து, அவளது பிரிவினை ஆற்றாளாய் அனசூயை மிக வருந்தா நிற்கப், பிரியம்வதையோ அவள் கணவன்பாற் செல்லுதல் குறித்து மகிழ்மீக்கூர்ந்து அனசூயைக்குத் தேறுதல் சொல்கின்றாள் (67). சகுந்தலையின் நலத்தைக் கோரும் இவளது அன்பு சிறந்த தொன்றேயாயினும், அஃது அனசூயை யின் அன்புக்கு ஈடாகமாட்டாது ஒருவர்பால் மிக்க அன்புடை யார் அவரது பிரிவுக்கு வருந்தாமல் இரார்; தம்மைப் பிரிந்து சென்று நன்மை எய்துவாராயினும், அவரது பிரிவினை நினையுந் தோறும் நெஞ்சங் குழையாநிற்பர். சகுந்தலையின் பிரிவுநோக்கி அனசூயை நெஞ்சம் நீராய் உருகும் அளவு, பிரியம்வதை யுருகாமையினை யுணர்ந்து பார்க்குங்கால், இவளது அன்பு அனசூயையின் அன்பினும் ஒருபடி குறைந்த தாகவே காணப்படு கின்றது. ஆனதுபற்றியே இவளை இடது து கண்ணாகவும் அனசூயையைத் தனது வலது கண்ணாகவுங் கொண்டு சகுந்தலை இவ்விரு தோழிமார்மாட்டும் அன்பு பாராட்டிவரும் நுட்பம் ஆண்டாண்டுக் கண்டுகொள்க. கிளிச்சிறையென்னும் பைம்பொன்னினாற் செய்த பாவை யொன்று தன் ஒரு மருங்கு வெண்பொற்பாவையும் ஒரு மருங்கு சலவைக்கற்பாவையும் வயங்கத் தான் அவ்விரண்டன் நடுவே ஒளியும் வனப்பும் மிக்குத் துலங்கினாற்போலச், சகுந்தலையும் ஒன்றினொன்று வேறான இயற்கைவாய்ந்த இவ்விரு தோழியருந் தன் இருமருங்கு மிருப்பத் தான் அவர் நடுநின்று விளங்கும் அழகிய காட்சி இந்நாடக நூலின் முற்பாதியிற் கவர்ச்சி மிக்கதாய் மிக்குத் தோன்றுதல் கண்டு கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/117&oldid=1578246" இலிருந்து மீள்விக்கப்பட்டது