பக்கம்:மறைமலையம் 7.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மறைமலையம் - 7

சுருசுருப்பு உடையவனாய்க், கதை நிகழ்ச்சிக்கு இன்றியமையாத சூழ்ச்சிகள் செய்வதில் வல்லவனாய்க், காதலரின் நிலையை அறியும் உய்த்துணர்ச்சி வாய்ந்தவனாய் அந்நாடகம் முற்றும் முனைந்து நிற்கப், பின்னையதில் இரண்டாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் மட்டுமே காணப்படும் விதூஷகனோ மடிந்த உள்ளத்துடன் உறக்கத்தில் மிக்க விருப்பு வாய்ந்தவனாய் இருக்கின்றான் (26). அதனொடு கோழை நெஞ்சமும் அச்சமும் உடையவன் (40,41). உணவில் மிக்க விருப்புள்ளவன். அரசன் சகுந்தலையை நினைந்து பெரிதுந் துன்புறுதல் கண்டும், இவன் தனது பசித் துன்பத்தையே மிகுதியாய் நினைக்கின்றான் (114). மாதலி இவனைத் துன்புறுத்துகின்ற காலத்தும் உணவுப் பொருளான கருப்பங்கழியையே இவன் உவமையாக எடுத்துப் பேசு கின்றான் (125). இதனை உற்று நோக்குங்கால் இவன் எந்நேரமும் உணவைப்பற்றிய நினைவே யுடையனாதல் புலப்படும். மேலும், உயர்ந்த தவவொழுக்கமுள்ள துறவிகளை இவன் குறைவாகப் பேசுதலை உணர்ந்து பார்க்குங்கால், இவனுக்கு உயர்ந்த நோக்கம் இல்லாமை தெளியப்படும் (35,117). இவனது இயற்கை இங்ஙனமெல்லாம் இழிந்ததாயிருத்தலி னாற்றான், துஷியந்தனது உவளகத்திலுள்ள அரசமகளிரால் இவன் இழிவாக நடத்தப்பட்டானென்பது விளங்குகின்றது (82). இவன் பேதைமதியுடைய னென்பதும், அரசனும் இவனைப் பற்றி நல்லெண்ணங் கொண்டிலனென்பதும் உணர்தல் வேண்டும் (42).

6

அற்றேல், இத்துணை யிழிந்த இயற்கையுடையனான ஒருவனை, இந்நாடகக் கதை நிகழ்ச்சியில் தொடர்புபடுத்த வேண்டுங் கட்டாயம் இல்லாதிருந்தும், ஆசிரியர் இவனை இதன்கண் இயைத்தது எற்றுக்கெனிற்; பழையகாலத்தரசர்கள் அரசியல் நடத்திய நேரம்போக எஞ்சிய சிறுபொழுதை இனிதாகக் கழித்ததற்பொருட்டு, நகைச்சுவை பயக்க வல்லவரான விதூஷகர் என்னுங் கோமாளிகளைத் தமதருகே வைத்துக்கொள்வது வழக்கம். அதனால், அவ்வழக்கத்தைப் பின்பற்றி, நாடக நூல் யாக்கும் பழைய ஆசிரியர்கள், ஓர் அரசனை நாடகக் கதைத் தலைவனாக வைத்துக் கதை தொடுக்கும் வழியெல்லாம், அவ்வரசன் மருங்கில் இடை யிடையே கோமாளி யொருவனையும் இயைத்து, அவனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/119&oldid=1578248" இலிருந்து மீள்விக்கப்பட்டது