சாகுந்தல நாடக ஆராய்ச்சி
121
பாட அறியேனே!" என்று விடை கொடுத்தனர். மீண்டும் அத்தெய்வம் “நீ பாட்டுப் பாடத் துவங்கு. உனக்கது வரும்’ என்று கட்டளையிட, அவர் "பெருமானே, யான் எதைப்பற்றிப் பாடுவேன்?" என்று கேட்க, அத்தெய்வம் "இறைவன் முதன் முதற் படைத்த படைப்பு வரலாற்றினைப் பாடு” என ஆணை தந்து மறைந்து போயது. அதன்பின் அவர் உடனே விழித்து எழுந்து பார்க்கத், தமக்குப் பாட்டுப் பாடும் ஆற்றல் மிகுந்து பொங்கக் கண்டு இறும்பூதுற்றவராகி, உடனே திருமடத்தினுட் சென்று இறைவனது படைப்பின் றோற்றத் தைப்பாடி, அதனை ஒரு தொடர்நிலைச் செய்யுளாகக் (காவியமாகப்) பாடியருளினார். அவர் அங்ஙனம் அருளிச் செய்த நூல் இன்னும் ஆங்கிலத்தில் வழங்கி வருகின்றது.
இனி, இத்தென்னாட்டின் கண்ணும் இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன் இருந்த சைவ சமய ஆசிரியரான திருஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டுள்ள சிறுவரா யிருந்த ஞான்றே, இறைவனையும் இறைவியையுந் தங்கட் புலனெதிரே கண்டு, அவரால் ஒரு பொன் வள்ளத்திருந்து ஞானப்பால் ஊட்டப்பெற்றுத், தமிழ்ச் சுவை நிரம்பிய அருமைத் திருப்பதிகங்கள் ஆயிரக்கணக்காக அருளிச் செய்தமையும், அவை தேவாரம்' என்னும் பெயரால் இன்றுகாறும் வழங்கி வருதலும் எவரும் அறிவர். இவர் மூன்றாண்டு அகவையினராய் இருந்த போதே கடவுளை நேரே கண்டு ஞானப்பாலூட்டப் பட்ட அவ்வரலாறு, அவர் அருளிச் செய்த திருப்பதிகங் களிலேயே அகச் சான்றாகக் குறிப்பிடப் பட்டிருத்தல் காண்க. இதன் விரிவு மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது பெருநூலிற் காணப்படும்.
இங்ஙனமே, காளிதாசர் அருள் பெற்றுப் பாடினமைக்கு வலுவான அகச்சான்று புறச்சான்றுகள் காணக் கிடையா வாயினும், அவர் அது பெற்றமை கூறுங் கதையில் ஒரு சிறிதேனும் உண்மை யிருக்கலாம். என்றாலுஞ் சான்றில்லா மையின் அதனை வற்புறுத்தாது விடுதலே வாய்வதா மென்க.
இனிக், காளிதாசரது சமயம் இன்னதென்பது சிறிது ஆராயற்பாற்று, இச் சாகுந்தல நாடக நூலின் முதலிலும் முடிவிலும் இவர் சிவபெருமானையும் அவர்தஞ் சிறப்படை