148
மறைமலையம் - 7
தமக்குள் தாமேயறிந்த புணர்ச்சியினராய்த், தம்மவரை யெல்லாம் விட்டுப்பிரிந்து போயது குற்றமேயெனக் கருதிய செவிலித்தாய், அவ்வழியே எதிரிற்போந்த அருந்தவத்தோரைக் கண்டு, அங்ஙனம் போய அவரது ஒழுகலாறு குற்றமுடைத் தாகலின், அவ்விருவரையுங் கண்டதுண்டேல் அவர்தமக்கு அந்தணீர் நல்லறிவு தெருட்டினீரோ என்னுங் கருத்தை அகத்தடக்கி வினவியதும்; அதுகேட்ட அம்முனிவரர் அவளது கருத்தறிந்து, அவளுக்கு அறிவுரைபகர்வாராய்ச், சந்தனமும் முத்தும் இசையும் மலையிலுங் கடலுளும் யாழுளும் பிறப்பினும் அவை பிறந்த இடத்திற்குப் பயன்படாவாய் அணிவார்க்குங் கேட்பார்க்குமே பயன்படுதல்போல, நும்மகளுந் தான் காதலித்த தன்னைக் காதலித்த ஆண்ட கை யொருவனுக்கே பயன்படற் பாலளாகலின், அவளது கற்பு மாட்சியும் அவன்றன் காதற் பெருமையும் உணர்ந்து அவரைக் கடிந்துரையேமாய், அன்பிற்பிணைந்த அவரது காதற் கிழமையினைக் கண்டு அது தலையான அறமேயெனக் கருதி மகிழ்ந்து போந்தேம்; ஆகலின், நீவிரும் அவ்விருவர்க்காகத் துன்புறல் விடுமின் என விடை கூறி அவளை ஆற்றியதும், எத்துணை அழகாக எத்துணை அறிவாக மக்களியற்கையோ டொட்டி, அம்முனிவரர் தந்தவமாட்சிக்கும், அக்காதலர்தம் விழுமிய ஒழுக்கத்திற்கும் வடுவுண்டாகாமல் எடுத்திசைக்கப் பட்டிருக்கின்றன பார்மின் மணங்கூடுதற்கு முன்னரே நிகழ்ச்த காதலொழுக்கத்தால் ஒருவரையொருவர் இன்றியமையாராய்த் தமர் தம்மை வேறுபிரித்து வேறுபிறர்க்கு மணம்புணர்த்துவர் கொலோவென்னும் அச்சத்தால், தமரறியாமலே புறம் போந்துவருங் காதலர் இருவரை எதிரே கண்ட துறவிகள், அவர்பாற் சினங்கொண்டு அவரை வைதுரையாமல், அவர்தங் காதற்கிழமைக்கு மகிழ்ந்து போந்ததல்லாமலுந், தன் காதல னோடுசென்ற அந்நங்கையின் செவிலித்தாய்க்கும் அவடன் காதற்கற்பின் மாட்சியை வியந்துரைத்து, அஃது அறமேயென வலியுறுத்தினாரென, அத்துறவோரின் அருளுக்கும் அறிவுக்கும் பொருந்த மேற் காட்டிய அருந்தமிழ்ச்செய்யுளை யாத்த தமிழ்ச்சான்றோரின் அறிவும் உணர்வும் உயர்ந்தோர் ஒழுகலாற்றினை எத்துணை நுட்பமாகக் கவர்ந்திருக்கின்றன! காதற் கற்பினைக் கண்டு மகிழாது அஃதுடைய சகுந்தலையை