சாகுந்தல நாடக ஆராய்ச்சி
159
றாகலிற் காளிதாசர் அது கூறியது வனப்புடைத்தேயாம். என்னை? இஞ்ஞான்றைப் பறவைப் பொறியைப் போல்வ தொன்று பண்டை நாகரிக மக்களாற் பயன்படுத்தப்பட்டு வந்தமை, “வலவன் ஏவா வானவூர்தி” எனப் புறநானுற்றுச் செய்யுள் ஒன்று (27) குறிப்பிடுமாற்றானும், வானின்கட் செலுத்தப்படும் “மயிற்பொறி" யொன்றனைச் சீவகசிந்தாமணி (273 ஆஞ் செய்யுள்) நுவலுமாற்றானும் நன்கறியப்படுதலி னென்பது.
இனி, இக்கூறிய குறைபாடுகள் விரவாமல் இச்சாகுந்தல நாடகத்தை ஆசிரியர் காளிதாசர் இயற்றியிருந்தனராயின், இது மறுவற்ற வான்மதி போலவும், நுரையற்ற திரைநீர் போலவும், புரையற்ற பருமுத்தம் போலவும், விலையற்ற முழு மாணிக்கம் போலவுந் தலைசிறந்து விளங்குமென்பதில் தட்டில்லை யன்றோ? என்றாலும், எத்துணைச் சிறந்தார் மாட்டும் இன்னோரன்ன சில குறைபாடுகள் உளவாதல் மக்களியற்கை யேயாய்ப் போதரக் காண்டலால், ஓர் ஓவியத்தில் நிழல்படும் பகுதி ஒளிபடும் ஏனைப்பகுதியினை மிக விளங்கச் செய்தல்போல, இக்குறைபாடுகள் சிலவும் இவர் இதன்கண் அமைத்த நலங்கள் பலவற்றையும் பெரிது திகழச்செய்யும் பெற்றிய வாய் நிற்றல் உணர்ந்துகொள்க.
1.
அடிக்குறிப்பு
கடாரதேயம் இக்காலத்திற் பர்மாதேயம் என வழங்கப்படுகின்றது.