மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
213
பொருள்களைக் கிடந்தவாறே சொல்லிக் கொண்டு போம் நெறி தன்மை நவிற்சி எனவும், அங்ஙனம் சொல்லிப் போதற்கு இடை இடையே உணர்வு சலியாமைப் பொருட்டுச் சுவை வேறுபடுத்தி அப்பொருளொடு இயைந்த பிற பொருட் டே டாற்றத்தை எழுப்பு நெறி உவமை உருவகம் எனவும், பெயர் பெறா நிற்கும். இவற்றின் வேறாக ஆயிரம் புனைந்துரைகள் கூறினாராயினும் அவையெல்லாம் இவ்வுவமை உருவகம் என்னும் இரண்டிலே அடங்கும் என்று கூறித் தொல்காப்பி யனார் உவமவியல் ஒன்றே வகுத்துக் காட்டிய உயர்வை விரிக்கிறார்.
உருத்திரங்கண்ணனார், இப்பட்டினப்பாலையில் இருபது உவமைகள் காட்டியுள்ளமையை வரம்பிட்டுரைக்கும் இவர் அவ்வுவமை யமைதியையும் விளக்குகிறார்.
உலகியற்பொருள்களில் அழகாற் சிறந்து மக்கள் மனவுணர்வை எளிதிலே கவர்தற் பயத்தவான அரிய பெரிய பொருள்களைக் கூறும் வழியெல்லாம் தன்மை நவிற்சியும், அவற்றிடையே இயற்கையழகுப் பொருளின் வேறாவன சில வந்தால், அவற்றை அழகு பெறக் கூறல் வேண்டி உவமையும் வைத்துரைக்கும் நுட்பம் பாராட்டற்பாலது என்கிறார்.
ஆசிரியர், உலகியற் பொருள்களைக் கிடந்தவாறே வைத்துக் கூறுவதையும், உலக இயற்கைப் பொருள் தோற்றங் களை இடையறாது திரிந்து கண்டு வியந்து கழிபெருமகிழ்ச்சி அடைந்தவர் என்பதையும், வானநூல் வல்லுநராகத் திகழ்ந்தார் என்பதையும் விரித்துரைக்கிறார்.
வரலாற்றுக் குறிப்புகள் :
இப் பகுதியில் பௌத்த சமண சமய வளர்ச்சி, பரவிய வகை என்பவற்றை அசோகர்கல்வெட்டு பாகியாள் வழிநடைக் குறிப்பு என்பவற்றாலும் சைன சூத்திரம், மணிமேகலை என்பவற்றாலும் உறுதிப்படுத்தி உருத்திரனார் உரைப் பொருத்தத்தை ஏற்கிறார்.
கடல் வாணிகம், பண்டையரசர் செங்கோன்மை, கந்தழி என்பவற்றை ஆய்ந்துரைக்கிறார். கரிகால் வேந்தன் போர்த்திறம் அறச் செயல் என்பவற்றையும் தொகுத்துரைக்கிறார்.