258
―
மறைமலையம் 7
அந்நிலையிலேயே சீர்திருத்தமும் சிவனியச் சால்பும் நிரம்பியவர் “தமிழ்க் காசு” எனப் பெற்ற கா. சுப்பிரமணியனார்.
அக்கால நிலையிலே, முனைப்பான சீர்திருத்தத் தொண்டிலே ஈடுபட்டதுடன் சாதி சமயங்களை ஆய்ந்து அவற்றின் குறைகளை அஞ்சாமல் பரப்பி அரிமா எனக் கிளர்ந்தவர் தந்தை பெரியார்.
ராசா ராம் மோகனர், அன்னி பெசண்டு அம்மையார், விவேகானந்தர் இன்னோர் தொண்டுகளும் இயக்கமும் நாட்டிலே கிளர்ந்து பரவிய காலச் சூழல். இன்னவெல்லாம், அடிகளார் சமய நோக்கின் உள்ளீடுகளாகி உந்தியெழ வாய்த்தவை. கிறித்தவக் கல்லூரிப் பேராசிரிய நிலையும், அச்சமயப் பரப்பாளர் தொடர்பும் அடிகளுக்கு வாய்த்தமையும் கருதத் தக்கதாம்.
ஒழுங்கியல் :
அடிகளார் எந்த ஒன்றிலும் ஓர் ஒழுங்கு முறையர். நாள்வழிக் கடமைகள் ஆகட்டும், கூட்ட நிகழ்ச்சிகள் ஆகட்டும் - எல்லாம், திட்டப்படுத்திய ஒழுங்கில் இயலச் செய்பவர்.
.
இன்ன செயலில் அடிகளார் ஈடுபட்டுள்ளார் என்றால், அது இன்ன பொழுது, என்று கண்டு கொள்ளத் தக்க கால ஒழுங்கினர்.
இன்ன பொருள் இன்ன இடத்தே தான் இருக்க வேண்டும் என்று திட்டங் கொண்ட இட ஒழுங்கினர்.
விளக்குத் துடைத்தலா, புத்தகம் தூசி துடைத்தலா, எழுத்துப் பணி புரிதலா எல்லாமும் நெறிப்பட இயற்றும் செயல் ஒழுங்கினர்.
நுண்மாண் நுழைபுலத்தால் எதனையும் எண்ணி, எண்ணத்தின் வரைபடம் உள்ளத் தோவியமாய்த் திகழ, ஆர அமர எழுத்தோவியமாகப் படைத்து, கலப்பும் பிழையும் வாரா வண்ணம் கவினுற அச்சிட்டு எல்லாமும் எப்பொழுதும் கலைமணம் கமழும் வகையில் செய் நேர்த்திச் செம்மலாய்த் திகழ்ந்தவர் அடிகள். இவற்றின் ஒட்டு மொத்தப் பார்வையும் அவர்தம் சமய நோக்குக்கு வைப்புகளாகத் திகழ்ந்தனவாம்.