9
1. நாடக இயல்பு
வடமொழி நல்லிசைப்புலவரான காளிதாச ரியற்றிய சாகுந்தல நாடக அமைப்பின் திறனும் நுட்பமும் வனப்பும் பயனும் ஆராய்ந்து தெளிவதற்குமுன், நாடகத்தின் இயல்பும் அஃது இப்பரதநாட்டின் கட்டோன்றிய வரலாறுந் தெரிந்து கொள்ளல் ன்றியமையாததாகலின், முதலில் நாடகத்தின் இயல்பு இன்னதென்பதனை ஒரு சிறிது விளக்குவாம். ஆறறிவுடைய மக்களும் அவரல்லாத அவரல்லாத ஏனை இயங்கும் உயிர்களுஞ் செய்யும் முயற்சிகள் எல்லாம் அறிவு முயற்சியுந் தொழின் முயற்சியும் என்னும் இருபெரும் பிரிவில் வந்து அடங்கிநிற்கின்றன. இவ்வாறு எல்லாவுயிர்கள் மாட்டுங் காணப்படும் இவ்விருவகை முயற்சி களும் பொதுவாகத் துன்ப நீக்கத்தையும் இன்ப ஆக்கத்தையுமே அவாவி நிற்பனவாகும். இவ்வுயிர்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாக உள்ள துன்பங்கள் பசியும் காமமுமாகவே காணப் படுகின்றன. பசித்துன்பத்தை உணவினாலும், காமத்துன்பத்தை ஆணும் பெண்ணுமாய் ஒருங்கு மருவுதலானும் போக்கி, அவ்வாற்றால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்ந்து வருதலைக் கண்கூடாக நாம் கண்டு வருகின்றனம் அல்லமோ? இங்ஙனமாகத் தமக்கு இயற்கையே எழும் இருவகைத் துன்பங்களையும் நீக்கி அவ்வாற்றால் இருவேறு இன்பங்களை நுகரும் இயங்கும் உயிர்கள் அவ்விருவகையின்ப நுகர்ச்சி யளவில் அமைதி பெறாமல், வேறுமோர் இன்பத்தை நுகர்தலில் விழைவு மிகுந்து நிற்கின்றன. அஃதியாதோவெனில், அவை தாந் தாம் விரும்பு மாறெல்லாம் விளையாடி நுகரும் இன்பமேயாம். பார்மின்கள்! பசியுங் காமநுகர்ச்சியுந் தீர்ந்தபிறகு பூனை நாய் முதலிய உயிர்களும் எவ்வளவு கிளர்ச்சியுடன் விளையாடி இன்புறு கின்றன! பூனையானது மரங்களைப் பிறாண்டியும், பதுங்கித்