பக்கம்:மறைமலையம் 7.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் - 7

அக் கதை நிகழ்ச்சியினை அறுத்து நிறுத்தாமல், “நினைவு கூர்தற்கு அடையாளமான ஓர் அணிகலத்தைக் காண்டலும் அவ்வசவு நீங்கும்" என்று அது தீர்தற்கும் வழி செய்து, சகுந்தலை மீண்டுந் தன் காதலனைக் கூடுவதாகிய நிகழ்ச்சி யினைத் தொடர்புபடுத்து வைத்தமையுமாகிய அருந்திறன் பெரிதும் பாராட்டற் பாலதொன்றாய்த் திகழ்கின்றது.

அதுவேயுமன்றி, மேற் சொன்னவாறு நேர்ந்த துருவாசர் வசையினைச் சகுந்தலை அறிவளாயின், அவள் தன் கையில் அரசன் அணிந்த கணையாழியின்பாற் கருத்து மிக வுடையளாய் அது தன் கையைவிட்டு நழுவாமற் பாதுகாத்து ஒழுகு வளாகலின், அரசன் அவளை மறத்தலும் நேராது. அது நேராதாகவே, மேற் கதை நிகழ்ச்சியுஞ், சகுந்தலையின் மனத் திட்பத்தையுங் கற்பின் கடப்பாட்டையும் ஊடுருவி ஒளிர மாட்டாதாய்ச் சுவைகுன்றி யொழியும். ஆகவே, ஆசிரியர் காளிதாசர் அத்துணைக் குறைபாடுகளும் இதன்கண் ஏறாமை விலக்குதற் பொருட்டு ஈண்டுச்செய்த செய்கைத்திறம் நுட்பம் நினையுந் தோறும் பேருவகையினை ஊட்டாநிற்கின்றது. துருவாசர் வருகையினையும், அவர் கூறிய வசைமொழி யினையும் அறிந்த தோழிமார், அவைதம்மை அறியாதிருந்த சகுந்தலைக்கு அவற்றை அறிவியாமலே விடுமாறு செய்த ஆசிரியரது நுட்ப வினைத்திறன், கதையின் றொடர்பை உள் நுழைந்து கண்டு இணைக்கமாட்டார்க்கு விளங்காதாயினும், அதனை அவ்வாறு கண்டு தொடுக்க வல்லார்க்குப் பெரியதோர் இறும்பூதினைப் பயக்குமென்க.

மேலும், ஏழுவகுப்புகளாகப் பிரிக்கப்பட்ட இந்நாடகக் கதைச் சுவையானது, துவக்கத்திலிருந்து படிப்படியே உயர்ந்து நடுநிற்கும் நான்காம் வகுப்பின்கண் இனி யுயர்தற்கு எல்லை இல்லையாமளவில் வந்து நிற்றலும், அதன் கட் சொல்லப்பட்ட துருவாசர் வசைமொழியானது ஒரு மணிக் கோவையினை இணைக்குங் கொக்குவிற்போல முன்பின் கதை நிகழ்ச்சியினைத் தொடர்புபடுத்துங் கருவியாய் உறுதலும் நினைவிற் பதிக்கற் பாலனவாகும். இந் நாடகத்தினைப் பயில்வார் இதன் நடுநிற்கும் நான்காம் வகுப்பினை நோக்கிச் செல்லுங்காற் சகுந்தலை தன் கணவனால் மறந்துவிடப்பட்டுத் தனியாளாய்த் துயர்கூர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/59&oldid=1577881" இலிருந்து மீள்விக்கப்பட்டது