பக்கம்:மறைமலையம் 7.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மறைமலையம் 7

இருக்கும் ஒரு தடாகநீரை அடையாளமாக நிறுத்தியுந், தனது துணையை எதிர்பாராத காதலர்க்கும் அவரது அன்பின் மிகுதியைப் பாராட்டி இறைவன் றிருவருளே ஒருகாற் றுணையாய்ப் போந்துநின்று அவரதுள்ளத்தைப் பற்றிய வசைமொழியினைப் போழ்ந்து அதனால் விழுங்கப்பட்ட

அவரது காதலன்பினை மீள்வித்து மிளிரச் செய்யும் என்பதற்குத் தற்செயலாய்த் தான் வீசிய வலையிற் சிக்குண்டு போந்த ஒரு மீனின் வயிற்றைப் போழ்ந்து அதன்கண்ணிருந்தும் எடுத்த அரசனது கணையாழியை வெளிக்கொணர்ந்த ஒரு செம்படவனது செயலை அடையாளமாக நிறுத்தியும் ஆசிரியன் இந்நாடகத்தை ஆக்கியிருக்கும் நுண்மாண் நுழைபுல வியல்பு உய்த்துணர்ந்து களிக்கற் பாலதா மென்க.

இனிக்கணையாழியை காணாமுன் அரசனால் விலக்குண்டு வானூடு மறைந்து ஏகிய சகுந்தலை எவ்வாறு ஆயினாள் எனவுங், கணையாழியைக் கண்டபிற் சகுந்தலையைத் தான் மணந்த வரலாறுகளெல்லாம் ஒரு சிறிதும் விடாமல் நினைவு கூர்ந்து ஆற்றொணாத் துயர் கொண்ட அரசன் எவ்வா றாயினான் எனவும் அவர் தம் முடிவு அறியும் வேட்கை அடங்கப்பெறாதாய் இதனைப் பயில்வோருள்ளந் துயருறுமாகலின், அதனையும் விடுவித்தற்கு ஆசிரியன் இதன் ஆறாம் வகுப்பின் ஈற்றிலும், ஏழாம் வகுப்பிலுஞ் செய்யுஞ் செய்கைத் திறனையும் ஈண்டுக் காட்டுதும்.

அரசன் தனது கணையாழியைக் கண்டதுமுதற் சகுந் தலையையன்றிப் பிறிது எதனையும் நினையமாட்டானாய்க் கழிபெருந்துயர் கூர்ந்து, அவளது வடிவழகை ஓர் ஓவியமாக வரைந்தவாறே தனது இளமரக்காவில் இருப்புழிப், பிள்ளைப் பேறின்றி இறந்துபோன பெருஞ் செல்வரான ஒரு வணிகரின் செய்தி கேட்டுத், தனக்கும் புதல்வற்பேறின்மையால் தனது நிலைமையும் அங்ஙனந்தான் ஆகப் போகின்றதென்னும் எண்ணந் தோன்ற ஆற்றகில்லா இடும்பையுற்று அயர்ந்து மெய்ம்மறந்து கிடக்கின்றான். அந்நேரத்தில், “ஓ பார்ப் பானைக் காப்பாற்று" பார்ப்பானைக் காப்பாற்று என்னும் ஓலக் குரலொலி சடுதியில் எழவே, அரசன் உடனே உணர்வுகூடி யெழுந்து, தன் நண்பனும் விதூஷகனுமான மாதவியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/63&oldid=1577885" இலிருந்து மீள்விக்கப்பட்டது