சாகுந்தல நாடக ஆராய்ச்சி
43
ஒரு கதையாக முடியக் காண்கின்றாம். எனவே, நாடகமாந்தரின் ஒழுகலாறுகளெல்லாம் அவரவர் இயற்கையின் வழியவாய்த் தோன்றி நாடகக் கதையினை நடாத்துமென்றுணர்தல் வேண்டும்.
இனி, நாடகமாந்தராகத் தெரிந்தெடுக்கப் பட்டாரின் ஒழுகலாறுகளுட் சில நல்லனவாயுஞ் சில தீயனவாயுஞ் சில இரண்டிலுஞ் சாராதனவாயுஞ் சில இரண்டுங் கலந்தனவாயும் நிகழக்காண்டலின், அவ்வொழுகலாறுகளை யுடையாரின் மனஇயற்கைகளும் நல்லனவாயுந் தீயனவாயும் இரண்டிலுஞ் சாராதனவாயும் இரண்டுங் கலந்தன வாயும் இருக்குமென்பது உய்த்தறியப்படும். ஏனென்றால், உலகிய லொழுக்கத்தில் மக்களின் பலவேறு இயற்கைக்கு இசையவே அவர் பேசுவனவுஞ் செய்வனவும் புறத்தே புலனாதல் காண்கின்றாம். அன்பும் அறிவும் மிக்க சான்றோன் ஒருவன் சொல்வனவுஞ் செய்வனவு மெல்லாம், அவனைச் சார்வார்க்கு அன்பையும் அறிவையுந் தந்து அவரை மகிழ்வித்தல் காண்டு மல்லமோ? அவையிரண்டு மில்லாக் கொடியரின் சொற்களுஞ் செயலுமோ அவரைத் தலைப்படுவார்க்கு அச்சத்தையுந் துன்பத்தையுந் தருகின்றன! மற்று, நலந்தீங்கில்லாச் சோம்பேறிகளின் சொற்செயல்கள் எவர்க்காயினும் நன்மையையேனுந் தீமையை யேனுந் தந்ததுண்டோ? இன்னுஞ் சிலர் சிலகால் நல்லராயுஞ் சிலகால் தீயராயுஞ் சிலர்மாட்டு நல்லராயும் ஏனைச் சிலர்மாட்டுந் தீயராயும் நடத்தலுங் காண்டு மன்றே தன் மனைவிமக்கள்பால் அன்புடையனாய் நல்லனாய் ஒழுகும் ஒரு கள்ளன், ஏனைப் பிறர்பால் அன்பில்லாத தீயனாய் அவரது பொருளைக் கவர்ந்து செல்லுதலுங்காண்டுமே! ஆகவே கட்புலனாகாத மாந்தரின் மனவியற்கை, கட்புலனாகும் அவர்தஞ் செயல்களானுஞ் செவிப் புலனாகும் அவர்தஞ் சொற்களானுமே ஆராய்ந்து அறியப்படுமென்க.
அஃதொக்குமன்னாயினும், ஒரோ வொருகால் நல்லார் ஒருசிலர் தஞ் சொற் செயல்களால் தீயார் போலவுந் தீயார் ஒருசிலர் தஞ் சொற்செயல்களால் நல்லார் போலவும் பிழைத்தறியப்படுதலுங் காண்டுமேயெனின் புறத்தே நிகழாநிற்கும் நல்லார் தீயாரின் சொற் செயல்களின் ஊடுபுகுந்து