பக்கம்:மறைமலையம் 7.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

47

முதலான நாடகமாந்தரின் மனவியற்கையொடு தான் ஒன்றாய் நில்லாதவழி ஆசிரியன் அவரியற்கையினை நன்குணர்ந்து கொள்ளமாட்டான். இனி, அவரியற்கையோடு ஒன்றாயே கலந்து விடுவானாயின், தன்னைமறந்து அவர் ஒழுகுமாறே ஒழுகுவன்; அவ்வாறாகவே அவன் கிறுக்குக் கொண்டவனாய் அவர் தம் ஒழுகலாறுகளைப் பிறர்க்கெடுத்துக் காட்டி நாடகநூல் இயற்ற மாட்டுவானல்லன். ஆகவே, நாடக ஆசிரியன் தன்னாற் கூறப்படுவார்தம் பல்வேறு இயற்கை களோடு உடனாய் நின்று அவற்றை நன்குணர வல்லனாத லொடு, தான் அவற்றின் வேறாய் நின்று தன் கூர்த்தமதியால் அளந்துணர்ந்த அவை அவர்தந் தொடர்பான ஒழுகலாறு களில் இனிது விளங்கித் தோன்றுதலையுந் காட்டவல்லனாவன். இங்ஙனந் தான்கொணர்ந்து நிறுத்தும் நாடகமாந்த ரியற்கைகளோடு ஒன்றாயும் வேறாயும் நின்று அவர்தம் ஒழுகலாறுகளை நுவன்று நாடக நூல் யாக்குந் திறம் நாடக நூல் எழுதப்புகுவார் எல்லார்க்கும் எளிதில் அமைவ தன்று. இத்துறையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றித் திகழ்பவர் ஆங்கிலத்திற் சேக்குவீயரும் (Shakespeare), அருந் தமிழில் இளங்கோவடிகளும், வடமொழியிற் காளிதாசருமே யாவர். ஏனென்றால், உயர்ந்தார் இழிந்தார் தம் இயற்கைகளின் உள்நுழைந்து அவற்றின் ஒற்றுமை வேற்றுமை களைக் கண்டறிதலுங், கண்டறிந்தவற்றைப் புறத்தார்க்குப் புலனாக்கு தலும் எளிய அல்ல.

அற்றேல், அவை அங்ஙனம் எளிய வாகாமை என்னை யெனிற், கூறுதும். உயிரில் பொருள்களெல்லாம் அறிவும் இல்லாதன. மற்று, உயிருள்ளனவோ அறிவும் ஒருங்குமுள்ளன. அறிவு தான்வேண்டியவாறு இயங்கவல்லது; தன் இயக்கத்தை மறிப்பதுண்டாகுமேல் அதனைக் கடந்து செல்லுதற்குச் சூழ்ச்சி செய்தலும், அதன்படி முடித்தற்கு முயற்சி செய்தலும் வல்லது. மற்று, உயிரில் பொருள்களோ அறிவும் இல்லன, ஆகையால், அவை தாம் வேண்டியவாறெல்லாம் இயங்க வல்லன அல்ல; அல்லவாகவே, அவை ஒருவர் இயக்கினால் இயங்குவதும், அவ்வியக்கத்தை ஒன்றுவந்து இடைமறித்தால் நின்று போவதுமே உடையன. இவ்விரண்டன் வேறு பாட்டினை அறிதற்கு ஒரு சிற்றெறும்பினையும் ஒருசிறு கோலியுருண்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/72&oldid=1577925" இலிருந்து மீள்விக்கப்பட்டது