50
―
மறைமலையம் 7
நுண்ணறிவினால்
அறிந்தனவாகும். இவ்வாறாக மக்களின் புற இயற்கைகள் ஒன்றோடொன்று ஒவ்வாத சிறப்பியல்புகளும், மக்கள் என்னும் பொதுமையில் ஒத்த பொதுவியல்புகளும் உடையவாய்க் காணப்படுதல் போலவே, அவர்தம் அக இயற்கைகளும் ஒன்றையொன்றொவ்வாத சிறப்பியல்பும் மக்களென்னும் பொதுமையில் ஒத்த பொதுவியல்பும் உடையவாய்க் காணப்படுகின்றனர். புறவியற்கை கண் முதலிய புலன்களால் நன்கறிப்படுதல் போல, அகவியற்கை அவற்றால் அறியப் படாமல் அவற்றின் வாயிலாக ஆழ்ந்தாராய்ந்து தெளியப்படுவனவா யிருத்தலால், நுண் மாண் நுழைபுலமுடையார்க்கன்றி ஏனையார்க்கு அவற்றை நன்கு நுனித்தறியும் அறிவு வாயாது ஆதலினாற்றான், மக்கள் மனவியற்கைகளின் ஒற்றுமை வேற்றுமைகளை நன்களந்து காட்டவல்ல நாடக ஆசிரியர்கள், ஏனை நூலாசிரியரின் மேலாக வைத்துக் கொண்டாடப்படுகின்றாரென்பது மக்களின் புற இயற்கைகளையும், மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களின் புற இயற்கைகளையும், மலை கடல் நாடு காடு நகர் முதலான புறப்பொருட் டோற்றங்களையும் உற்றுநோக்கி யுணர்ந்து, அவை தம்முள் வனப்பு மிக்க கூறுகளை ஆராய்ந்தெடுத்துச் சய்யுள் உரை இயற்றுதலும் அரியதொரு புலமைத் திறத்தின்பாற் படுமேயாயினும், அஃது அவையெல்லாவற்றின் அகத்தும் நுழைந்து அங்குப் புதைந்து கிடக்கும் அவையிற்றின் பொதுவியல்பு சிறப்பியல்புகளை வரன்றிக் கொணர்ந்து நங் கண்ணெதிரே ஒளிர வைக்கும் ஆன்ற புலமைத் திறத்திற்கு ஈடாகாது. எனவே, 'சாகுந்தலம்' போன்ற நாடக நூலுஞ், 'சிலப்பதிகாரம்' போன்ற பெருங்காப்பிய நூலும் இயற்றி மக்கள் மனவியற்கைகளைப் புலங்கொளக் காட்டும் காளிதாசர் இளங்கோவடிகளைப் போன்ற நல்லிசைப் புலவர்க்கு, ஏனைப் புலவர்கள் ஒவ்வாரென்பது பகுத்துணர்ந்து கொள்ளப்படும்.
இனி, ஆசிரியர் காளிதாசர், 'சாகுந்தலம்' என்னும் இந்நாடகக் காப்பியத்தின்கட் கொணர்ந்தியைத்த நாடக மாந்தரின் அகவியற்கைகள், அவர்தம் அவர்தம் ஒழுகலாறுகள் ஒன்றோடொன்று பிணைந்து ஒரு கதையாகத் தொடர்ந்து செல்லுமாற்றால் இதனைப் பயில்வார்க்கும், இதனை நாடக அரங்கின்கட் காண்பார்க்கும் நன்கு புலனாமாறு விளக்கிச்