பக்கம்:மறைமலையம் 7.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

51

செல்லும் அரிய புலமைத் திறத்தினை ஈண்டெடுத்துக் காட்டுவாம்.

இந்நாடகத்திற்குத் தலைமகள் ஆவாள் சகுந்தலையுந் தலைமகன் ஆவான் துஷியந்தனும் ஆகலானும், இவர் இருவருடைய ஒழுகலாறுகளின் பிணைப்பின்றி இந்நூல் திரித்துத் தொடுக்கப் படாமையானும் இவ்விருவர் இயற் கைகளே முதற்கண் ஆராய்ந்துரைக்கற்பாலன. இவ் விருவருள் ளுஞ் சகுந்தலையை விதந்தெடுத்து, அவளது பெயரையே இந்நூற்குப் பெயராக ஆசிரியன் அமைத்திருத்தலை ற்றுநோக்குங்கால், இந்நாடகக் கதையுள் முதன்மை பெற்றுச் செல்வது சகுந்தலையின் ஒழுகலாறே யென்பது நன்கு விளங்காநிற்கும். மற்றுத், துஷியந்தன் ஒழுகலாறோ அவன் சகுந்தலையைக் கானகத்திற் றலைப்பட்டு முயங்கிப் பிரிந்து போய், அவளை அறவே மறந்து கைவிட்டுப் பிற்கண்ட கணை யாழியால் அவளை நினைவு கூர்ந்து அதன்பின் நேர்ந்த வானுலகச் செலவால் அவளைத் தற்செயலாய் மீண்டுந் தலைக்கூடிய அவ்வளவில் முடிகின்றது. இவனது ஒழுகலாறு இக் கதைத்தொடர்பில் முழுதுந் தொடர்ந்துநில்லாது இடை யறுந்து பட்டுப், பின்னர் அவன்செயலாயன்றித் தற் செயலாய் அதனூடு விரவிப் பெருந்துயர்க் காரணமாய்ப் பயில்வார்க் இன்பம் பயவாததொன்றா யிருத்தலின், அதற்குரிய அவன் பெயரை இந்நாடகத்திற்குப் பெயராய் நிறுத்தாது ஆசிரியன் விட்டது சாலப் பொருத்தமுடைத்தாதல் காண்க.

இவ்வாறு இந்நாடக நிகழ்ச்சியில் முதன்மையுற்று நிற்குந் தலைவியாகிய சகுந்தலையின் அகப்புற இயற்கைகளே முதற்கண் ஆராயற்பாலனவா யிருக்கின்றன. இம் மங்கையின் பிறப்பு வரலாற்றை ஆராய்பவர்க்கு, இவள் நேரே காணப்படா விடினும் அழகில் மிக்கவளாகத்தான் இருக்கவேண்டுமென்னும் உறுதியுண்டாம். அழகில் மிகச் சிறந்தவளாகப் புராண நூல்களால் நுவலப்படும் 'மேனகை' என்னுந் தேவமாதுக்குந், தவத்தான் மனந்தூயராய்ச் சுடரொளி வீசும் விசுவாமித்திர முனிவர்க்கும் புதல்வியாய்ப் பிறந்த சகுந்தலை அழகிற் குறைந்தவளாயிருத்தல் கூடுமோ அல்லிக்கொடியிற் கவின் கெழுமிய அல்லிமலரல்லாற் பிறிதொன்று உளதாமோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/76&oldid=1577958" இலிருந்து மீள்விக்கப்பட்டது