64
மறைமலையம் - 7
சார்ந்து நிற்கும் இனிய காட்சியினை இவள் காட்டியபோது, இவ ன்றோழி பிரியம்வதை யென்பாள் சகுந்தலை தானுந் தகுந்த ஒரு கணவனை மணக்கலாகுமா வெனக் கருதுகின்றாள் என்று பகர்ந்து பகடி செய்ததற்கு, "இதுதான் உன் உள்ளத்தில் உள்ள உண்மையான எண்ணம்” என்று சுருங்கிய விடை கூறித் தன் பேச்சை முடித்துவிடுகின்றாள். துஷியந்த மன்னன் இவர்கள்பாற் போந்து உரையாடும்போதுஞ், சகுந்தலை அவன் வினாயதற்கு விடைதராமலே நிற்க, இவடன் றோழி மாரே அவன் வினாயவற்றிற்கெல்லாம் விடைகூறி உரையாடு கின்றனர். தான் அவன்மேற் பெருங் காதல் கொண்டமையின், அவனது வரலாற்றினையறிதற்கு அவள் பெரிது விழைந்தும், அதனைத் தான் வாய் திறந்து கேட்டிலள். இன்னும் இவள் துஷியந்த மன்னன்மேல் அளவிறந்த காதல் கொண்டவளாய்த், தன்றோழியர் உதவியால் அவனைக் கூடுகின்ற காலத்தும், இவள் தன் காதலனுடன் உரையாடுஞ் சில சொற்களும் அவன் தன்னைத் தொடாதபடி தடுப்பனவாயிருக்கக் காண்டுமே யல்லாற் பிற இல்லையே. மேலுந், தன் காதலன் தன்னை அக்கானக உறையுளிலே விட்டுப் பிரிந்துபோய்ப் பல நாட்கள் கடந்தும், இவள் அவனையே நினைந்து, கனவின் கண் உலவுவாரைப்போல் தன்னை மறந்திருந்த நிலையினளாகப் புலப்படுகின்றனளேயன்றி, அவன் தன்னை மறந்திருந்த குற்றத்தையாவது தான் அவன்பாற் செல்ல வேண்டும் முறை யினையாவது தன் றோழிமாருடனும் எடுத்துப் பேசின வளாகத் தெரியவில்லை. பின்னர் இவள் தந்தையார் இவளைக் கணவன் இல்லத்திற்கு விடுத்தற் பொருட்டு வேண்டும்
ஒழுங்குகள் செய்யும்போதும், இவள் முடிவாகத் தன் றந்தையார் ஆசிரமத்தை விட்டுப் போம் போதுந், தான் வளர்த்த மல்லிகைக் கொடியையும் மான் கன்றையுந் தன் றோழிமாரையுந் தன் றந்தையாரையும் விட்டுப் பிரியும் ஆற்றாமையாற் சில மொழிகள் நுவன்று நெஞ்சம் நெக்குருகு கின்றனளே யன்றி, ஆண்டும் மிகுதியாய் எவையும் பேசுகின்றிலள்.
இனித், தன் றந்தையால் விடுவிக்கப்பட்டுத் தன் கணவன் துஷியந்தன்பாற் சென்று அவன் முன்னிலையிற் சகுந்தலை நிற்புழி, அவன் இவளைக் கானகத்தில் மணந்து கொண்ட வரலாறுகளையெல்லாம் முற்றும் மறந்து, இவளை ஓர்