பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 மலர் காட்டும் வாழ்க்கை

‘மை தீட்டும் நேரத்தில் தீட்டும் கோலைக் காளுத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவருடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்’ என்ற கருத்தைத் தரும், எழுதுங்கால் கோல்காணுக் கண்ணேபோல்

கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து.

என்ற குறள் காதலின் உயர்வினைக் காட்டும் அருமைக் குறள் களில் ஒன்றாகும்.

இதுகாறும் கண்டவற்றால் திருக்குறள் ஒர் அறிவுப் பெட்டகமாக-களஞ்சியமாகத் திகழ்வதனைக் காணலாம். இது குறித்தே,

பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ? பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ?

என்ற கேள்வி பிறந்தது. மேலும்,

எல்லாப் பொருளும் இதன்பாலுள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்

என்றும் பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் திருக்குறளைப் போற்றினர். திருவள்ளுவர் சொல்லாத பொருளில்லை; அவ்வாறு சொல்லவந்த பொருளை அழகுபடுத்தாமல் விட்ட தில்லை. திருக்குறளின் பெருமையறிந்தே இந் நூலுக்குப் பலர் உரை கண்டனர்; தமிழ் கற்ற பிற நாட்டவரும் தத்தம் மொழிகளில் மொழிபெயர்த்து நின்றனர். சுருங்கச் சொன்னல் திருவள்ளுவர் இயற்றியருளிய திருக்குறள் வாழ்க்கையின் அனைத்தொழுக்கங்களையும் நயம்படப் போதிக்கும் ஒர் அற நூலாய், உயர் அறிவுக் களஞ்சியமாய்த் திகழ்கிறது என்பது ஒருதலை.