பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 14 மலர் காட்டும் வாழ்க்கை

‘அயல்மணம் ஒழியருள்’ என வேண்டும் அவர், அயல் மணமாயின் அது பிழை மணம், அவரை மணப்பதே நன்மணம்’ என்று கூறி, நன்மணம் புரிய அருளும்படி முருகனை வேண்டுகின்றனர்.

கலைச் சிறப்பு

துடி, யாழ், பறை முதலாகிய இசைக்கருவிகளை இயக்கும் கலைஞர்களுமாவர் இவ் வேடுவர்கள். வழிப்போக்கரை அலேத்து அவர் பொருளைக் கவரும்போது பறைகளைக் கொட்டு வார்கள், களவு கொளும்போது சின்னம் என்கிற இசைக் கருவியை ஊதுவார்கள். துத்தரிக் கொம்பு, குழிக் குழல், மணி ஆ கி ய ன வு ம் அவர்தம் இசைக்கருவிகளே. கொற்றவையை வணங்கும்போது அவ்விசைக்கருவிகளையும் முழக்கி இறைவியின்முன் வைத்து வணங்குவர்.

ஆறெறி பறையும் சூறைச் சின்னமும் கோடும் குழலும் பீடுகெழு மணியும் கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ அவர்கள் வழிபடுவர்.

இவர்கள், உறங்குகின்ற ஊர்களிடைச் சென்று, அவர்கள் நடுங்கும்படி, துடியை முழக்கிப் பொருள்களைக் கவர்வர் என்பதை,

துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு கண்ணில் எயினர்

எனவரும் தொடர் கொண்டு அறியலாம். இவர்களே துடியும், யாழும் இசைக்க அறிந்திருந்தனர். எனினும், இவர் தம் கூட்டத்தில் துடியை முழக்கத் தனியே புலையர்களும், யாழை மீட்டத் தனியே பாணர்களும் இருந்தனர்.

குறவர்கள் குறிஞ்சிப்பண் பாடவும், இசைக் கருவிகளை இயக்கவும் அறிந்திருந்தனர்.