பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை காட்டும் பண்புகள் 125

இவ்வாறு மணிமேகலை, இராசமாதேவியிடம் கூறி அவள் மனத்தில் இரக்கத்தைத் தோற்றுவித்து, அதல்ை அந் நாட்டு மன்னன் சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக ஆக்கச் செய்தாள்.

இவ்வுடம்பு முன் செய்த வினையால் பிறந்தது; நல்வினை தீவினைகளைச் செய்வதற்குக் காரணமாக இருப்பது. புனுகு முதலான பூசுபொருள்கள் இன்றேல் புலால் நாற்றம் வீசுவது. எஞ்ஞான்றும் இளமையுடன் இருக்கும் என்று இயம்ப முடியாதது; மூப்பும் சாக்காடும் முன்தோன்ற நிற்பது; கொடிய நோய்களுக்கு இருப்பிடமாக இலங்குவது; ஆசைகள் அலைக் கழிக்கும் கடல்: குற்றங்கள் நிறைந்திருக்கும் ஒரு பாண்டம். புற்றிலே பாம்பு தங்கியிருப்பது போலக் கோபம் உறையும் ஒர் இடம்; துன்பம், திகைப்பு, மூர்ச்சையடைதல், வாய்விட்டு அழுதல் முதலான பல தன்மைகளை எப்போதும் தன்னகத்தே கொண்டுள்ள உள்ளத்தையுடையது; மக்கள் உடம்பின் இயற்கை இத்தகையதுதான் என்று மணிமேகலை தெளிவுறப் புலப்படுத்துகின்றது :

வினையின் வந்தது வினைக்குவிளை வாயது புனைவன நீங்கின் புலால்புறத் திடுவது மூப்புவிளி வுடையது தீப்பிணி யிருக்கை பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம் புற்றடங்கு அரவின் செற்றச் சேக்கை அவலம் கவலை கையாறு அழுங்கல் தவலா வுள்ளம் தன்பால் உடையது மக்கள் யாக்கை யிது

(பளிக்கறை புக்க காதை 113-120)

இது போன்றே சாவு, உறங்குவதைப் போன்றது; பிறப்பு, உறங்கி விழிப்பதைப் போன்றது என்னும் குறட்கருத்து, மணிமேகலையில் பின்வரும் தொடர்களில் எதிரொலிக்கக் காணலாம்.