பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பான வாழ்க்கை 21

மாலையில் அன்றி, நேரந்தவறிய நள்ளிராப்பொழுதில் விருந்தினர் வந்தாலும், தலைவி அதனல் ஒரு சிறிதும் வாட்டங் கொள்ளாமல், வந்த விருந்தினரை முகமலர்ந்து வரவேற்று வேண்டிய உதவியினைத் தட்டாமற் செய்கின்றாள்:

அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள்.....................

(நற்றிணை : 142 : 9-11)

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சிறுசிறு ஊடல் எழுதல் இயற்கை. இவ்வாறு ஊடல் காதலர் வாழ்க்கையில் இடம்பெறுதல் வேண்டும் என்றும், அவ்வாறு ஊடல் - பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இடம்பெறவில்லையாயின், காதல் அளவுக்கதிகமாகக் கனிந்துபோன பழமும், முற்றாத இளங்காயும் போன்று பயனற்றதாகிவிடும் என்பர் திருவள்ளுவர் :

துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.

(திருக்குறள் : 1.306)

இவ்வாறு கணவன் மனைவியர் இடையில் வந்துறும் ஊடல், விருந்தினரைக் கண்டால் அகன்றுவிடுவது உண்டு. தமக்குள் இருக்கும் பிணக்கினை அயலார் அறியாதவாறு காத்தலில் தலைவி வல்லவள். வழிவழியாக வந்தமைந்துவிட்ட குடும்பப் பண்பாடு அவளை அவ்வாறு பண்பும் பொறுமையும் உடையவளாக மாற்றிவிடும் தகுதி சான்றதாகும். ஊடலால் உளந்துன்புற்ற தலைவன் ஒருவன், விருந்தினருடன் வீட்டினுள் சென்று தலைவியின் சினத்தையாற்றி அவள் அழகுமுகத்தில் புன்முறுவலைக் காண விரும்பினன். அவன் காணவிரும்பும் காட்சியினைத் தன் உளத்தில் பின்வருமாறு அமைத்துக் காணு கின்றான்: