பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மலர் காட்டும் வாழ்க்கை

தன் பிரிவுத்துயர் கை கடந்து துன்பம் விளைவிக்கும் காலையிலும் தலைவி, தன் இன்பக்காலத்தில் தனக்குத் துணை நின்ற தோட்டத்து வேங்கை மரத்தை மறந்தாளில்லை. எவ்வுயிரையுந் தன்னுயிர்போல் எண்ணி உவக்கும் பெருமனம் இயற்கையில் தோயும் இனிய மனம் தலைவியுடையது. எனவே தான் தலைவன் வரையாது பிரிந்த விடத்தும், இன்னமை யுடைய இராக் காலங்களில் தலைவனும் தலைவியும் பேசுவதற்கு இனிய துணையாகவிருந்த மனைத்தோட்டத்தின்கண் உள்ள வேங்கை மரத்திற்காவது ஒரு தூது மொழியை யனுப்பியிருக் கலாமே, மறந்து விட்டாரே என ஆற்றாமை மீதுார்ந்து அவலத்தில் ஆழ்கிறது அவள் உள்ளம்:

நமக்கொன் றுரையா ராயினும் தமக்கொன்று இன்ன இரவின் இன்துணை யாகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ துறத்தல் வல்லியோர் புள்வாய்த் துதே.

(குறுந்தொகை : 266)

வற்றிய பாலையிலும் வற்றாத அன்பு

பொருள்வயிற் பிரிந்து செல்லும் தலைவன் கொடிய பாலை நிலத்தின் வழியே பயணஞ் செய்கின்றன். அப் பாலைக்காடு, கள்ளி மரங்கள் மிகுந்தது. ஆறலை கள்வர்கள் ஆங்காங்கே மறைந்திருந்து, அத்தம் செல்வோரை அலறத் தாக்கிக் கொல்ல முயல்வர். அவர்தம் கைப்பொருள் வெளவும் கடப் பாட்டுடன், இரும்பு முனையுடைய அம்புகளைத் தீட்டித் தீட்டிக் கூர்மைப்படுத்துவர். தம் நகத்தின் முனையில் அந்தக் கூர் தீட்டிய அம்புகளின் கூர்மையினைப் பரிசோதித்தும் பார்ப்பர். அப்பொழுது எழும் ஒசை அச்சமும் அவலமும் சான்றது. அதற்கீடான ஒசை பிறிதொன்று அந்தப் பாலைக் காட்டில் உண்டு. அது கள்ளி மரங்களில் உறையும் பல்லியின் ஒசையாகும். பல்லி தன் துணையை அன்போடு அழைக்கும் போது அத்தகைய ஒலியின எழுப்பும், *