பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மலர் காட்டும் வாழ்க்கை

என்ற பாட்டால் அறிவுத் தெளிவை ஆன்றாேர்க்கு வழங்கக் கூடிய நூல்களாக அவர் தொல்காப்பியம், திருக்குறள், திருக் கோவையார் ஆகிய மூன்று நூல்களையும் கொண்டார் என்பது நன்கு விளக்கமுறுகின்றது. காலங்கடந்தும் அறிவுச் சுடரொளி பரப்பும் அருமை வாய்ந்த அறிவு நூல் திருக்குறள் என்பது திருவள்ளுவ மாலையில் இறையனர் பாடியதாக அமைந்துள்ள பாடலின் பொருளாகத் துலங்கக் காணலாம். அப் பாடல் வருமாறு:

என்றும் புணராது யாணர்நாட் செல்லுகினும்

கின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்-குன்றாத r செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்

மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.

“ இனி, திருக்குறள் அறிவுப் பெட்டகமாகக் கிளரொளி பரப்புவதனைக் காண்போம்.

திருவள்ளுவரின் முதற்குறளையும் முடிவுக் குறளையும் ஒரு சேரக் காண்போம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.

மேற்போக்காக நோக்குமிடத்துத் தமிழ் நெடுங்கணக்கில் ‘அ'கரம் முதலாவதெழுத்து, னகரவொற்று(ன்) முடிவான எழுத்தாகும். முதற்குறளில் முதலெழுத்து தமிழ் எழுத்து முறையில் முதலெழுத்தினையும், இறுதி எழுத்து எழுத்து முறை யின் இறுதி எழுத்தினையும் கொண்டிருப்பது திருவள்ளுவர் தமிழெனும் கடலையே அளந்திருப்பதாகத் தோன்றுகிறது.