பக்கம்:மாணவர்களுக்கு.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

மாணவர்களுக்கு

700 கோடி. இத்தனை நாக்குகளில் ஒன்றாவது ஏழாவது சுவையை இன்னும் காண முடியவில்லை. இதை நீங்கள் எண்ணி எண்ணி மகிழலாம்.

இசையை ஏழாக, சுவையை ஆறாகக் கண்டவர்கள்தான் நிலத்தை ஐந்தாகக் கண்டார்கள். மலையும், மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி, காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை, நிலமும் நிலத்தைச் சார்ந்த இடமும் மருதம், கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தல், மணலும் மணலைச் சார்ந்த இடமும் பாலை என்று. இதற்கு மேல் 5000 ஆண்டுகளாக உலகின் ஐந்து கண்டங்களிலுமுள்ள எந்த மக்களாலும் ஆறாவது நிலப்பரப்பைக் காண முடியவில்லை.

நிலத்தை ஐந்தாகக் கண்டவர்கள்தான் காற்றை நான்காகக் கண்டார்கள். நான் தில்லியில் சில நாட்கள் தங்கியிருந்தேன். காற்று மூன்று பக்கம்தான் வந்தது. ஒரு பக்கம் மலை. மலேசியாவில் சில மாதங்கள் இருந்தேன். காற்று இரண்டு பக்கம்தான் வந்தது. மற்ற இரு புறமும் மலைகள். மலையாளத்தில் ஒரு பக்கம்தான் காற்று வந்தது. மற்ற மூன்று பக்கமும் மலைகள். தமிழகத்தில் நான்கு பக்கங்களிலுமிருந்து காற்று வருகிறது என 5000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டிருக்கிறார்கள். அது இன்று வரையிலும் அப்படியே மாறாது வந்து கொண்டிருக்கிறது, அது மட்டுமல்ல, அக்காற்றுகளை தொகைப்படுத்தி, வகைப்படுத்தி, பெயர்ப்படுத்தி, செயல்படுத்தியிருக்கிறார்கள். கிழக்கே இருந்து வருகின்ற காற்றுக்கு கொண்டல் என்று பெயர். அது மேகத்தின் மூலம் நீரைக் கொண்டு சென்று மழையாகப் பொழிந்து முல்லை நிலத்தை வாழ்விக்கும். மேற்கே இருந்துவருகின்ற காற்றுக்கு கோடை என்று பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/21&oldid=1267686" இலிருந்து மீள்விக்கப்பட்டது