பக்கம்:மாணவர்களுக்கு.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

மாணவர்களுக்கு

முதலியார், உ. வே. சாமிநாத ஐயர், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள், வ. உ. சிதம்பரனார், நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள், திரு. வி. கல்யாணசுந்தர முதலியார், ந. மு வேங்கடசாமி நாட்டார் ஐயா, பண்டிதமணி கதிரேசன் செட்டியார். தமிழ்க்காசு கா. சுப்ரமணிய பிள்ளை, மகாகவி சுப்ரமணிய பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் முதலிய சான்றோர்களைப் பெற்றுக்கொடுத்த நூற்றாண்டு கடந்த நூற்றாண்டு, இந்தப் பெருமை அதற்கு உண்டு.

இந்த நூற்றாண்டுக்கு ஒரு பெருமை அது கடந்த நூற்றாண்டிற் பிறந்த அத்தனை பேருக்கும் நூற்றாண்டு விழாக் கொண்டாடுகிற பெருமை இந்த நூற்றாண்டுக்கு உண்டு.

அடுத்த நூற்றாண்டுக்கு ஒரு பெருமை வரப்போகிறது. அது அப்போது பள்ளியில் படிக்கின்ற வரலாற்று மாணவர்கள், “முன்னொரு காலத்தில் சான்றோர்கள் என்று சிலர் வாழ்ந்ததாகத் தெரியவருகிறது” என்று படிக்கப் போகிறார்கள் என்பதே. சான்றோர்கள் எவரையும் காண முடியாமல் போய்விடுமோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, நம்பிக்கை, நாணயம், ஈகை, இரக்கம், கொடை என்பவைகள் விளைந்த புண்ணிய பூமி நம் தமிழ்நாடு.

இவையத்தனையும் கூனி, குறுகி, கருகி, பட்டுப் போய் விட்டன. அது மட்டுமல்ல; அவை விளைந்த பூமியில் பொய், பித்தலாட்டம், புனை சுருட்டு, சூது, வஞ்சனை, பொறாமை, ஏமாற்றம், களவு, இலஞ்சம், கலப்படம் முதலியவை விளையத் தொடங்கி விட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/53&oldid=1430821" இலிருந்து மீள்விக்கப்பட்டது